Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் கொரோனா அதிகரிப்பு: எல்லை பகுதி மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

மார்ச் 20, 2022 10:46

சென்னை :''கேரளாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருவதால், எல்லை பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் 25வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில், நேற்று நடந்தது. சென்னை தேனாம்பேட்டை, தாமஸ் சாலையில் நடந்த முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பின், அமைச்சர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட, 21.21 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி, இரண்டு நாட்களுக்கு முன் துவக்கப்பட்டது. இதுவரை, 3 லட்சத்து 61 ஆயிரத்து 263 சிறார்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.அதேபோல், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில், 28 லட்சத்து 25 ஆயிரத்து 383 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 5 கோடியே 32 லட்சத்து 28 ஆயிரத்து 642 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுஉள்ளது.'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி, 4 லட்சத்து 9 ஆயிரத்து 558 பேருக்கு போடப்பட்டுள்ளது. மேலும் 1 கோடியே 4 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு போட வேண்டியுள்ளது. இரண்டு நாட்களாக தடுப்பூசி போடுவது, சராசரி 2 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் 3,100 ஊராட்சிகளிலும், 25 நகராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த ஏழு நாட்களாக, தினசரி கொரோனா தொற்றின் அளவு, 100க்கு கீழ் குறைந்துள்ளது. அதேபோல், இறப்பும் பூஜ்ஜியம் என்ற அளவில் உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில், நேற்று முன்தினம், 847 பேர் பாதிக்கப்பட்டு, 59 பேர் உயிரிழந்து உள்ளனர்.கேரளா - தமிழக எல்லைப் பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்துக்கான, 13 வழிகள் உள்ளன. மேலும், ஆசிய நாடுகள் அனைத்திலும் பெரிய அளவில் தொற்று வேகமாக பரவி வருகிறது.எனவே, மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தடுப்பூசி மட்டும் தான் தொற்றில் இருந்து விடுபட ஒரே தீர்வு.சென்னை ஐ.ஐ.டி., எனும் உயர்கல்வி நிறுவனத்தில், ஆறு மாதங்களில் 50 மான்கள் வரை இறந்துள்ளன. அங்கிருந்த நாய்களால், மான்கள் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 'ஆந்த்ராக்ஸ்' என்ற கால்நடைகளுக்கு பரவக்கூடிய நோய் காரணமாக, மான்கள் இறக்கவில்லை.

இறந்துபோன மான்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுக்கு பின், இறப்புக்கான அதிகாரப்பூர்வ காரணம் தெரியவரும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, அரசு பள்ளி மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தால், ஐந்தாண்டுகளுக்கு பின், 30 லட்சம் மாணவியர்பட்டதாரிகளாக உருவாவர். இது தங்கத்தையும் தாண்டி, மாணவியை வைரமாக மாற்றக்கூடிய நல்ல திட்டம்.இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உடனிருந்தனர்.சேகர்பாபுசென்னை, கொளத்துார் எவர்வின் பள்ளியில், 12 வயது முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை, அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்