Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண்ணுரிமை கொள்கையின் மறுவடிவம் தான் 1,000 ரூபாய் நிதியுதவி திட்டம்: முதல்வர் ஸ்டாலின்

மார்ச் 22, 2022 11:06

சென்னை : ''பெண்ணுரிமை கொள்கையின் மறுவடிவம் தான் மாணவியருக்கு 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம். இதற்காகவே தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பட்ஜெட் மீதான விவாதம்:

அ.தி.மு.க., - பாண்டியன்: ஏழை பெண்களின் திருமண கனவை நனவாக்கும் வகையில், ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது

நிதி அமைச்சர் தியாகராஜன்: இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1.50 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கும் நிதிக்கு ஏற்ப விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் 260 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வந்தது.

நான்கு ஆண்டுகளாக, தங்கம் வழங்கப்படவில்லை. இதனால், 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இவர்களுக்கு திட்ட பயன்களை வழங்க, 3,000 கோடி ரூபாய் தேவை. திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதை, மாநில தணிக்கை துறை கண்டறிந்துள்ளது. நான்கு ஆண்டுகளாக செயல்படுத்தப் படாததால், மீண்டும் வருவதில் பெரிய பிரச்னை உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்: திருமண உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்தது, தி.மு.க., அரசு. முதலில் திட்டத்தை நிறுத்திய அ.தி.மு.க., அரசு, பின் இதனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்தது. திருமண உதவித் தொகையுடன், தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கியது. தற்போது, நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்தபோது, 24.5 சதவீதம் பேர் மட்டுமே, தகுதியுள்ள பயனாளிகள் என கண்டறியப்பட்டது.

இதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த குளறுபடிகள், முறைகேடுகள் குறித்து பேசி, திட்டத்தை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. அதேநேரத்தில், உயர் கல்வியில் பெண்கள் சேர்வது, 46 சதவீதமாக உள்ளது. எனவே, அரசு பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டமாக, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு முன்பாக, கல்வி என்ற நிரந்தர சொத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்ணுரிமை கொள்கையின் மறுவடிவம் தான் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம். தாலிக்கு தங்கம் திட்டம் வாயிலாக, ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் பயன் பெற்றனர். கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் வாயிலாக, ஆண்டுக்கு 6 லட்சம் மாணவியர் பயன் பெறுவர். இவ்வாறு விவாதம் நடந்தது.

தலைப்புச்செய்திகள்