Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறிவாலய அரசு மத்திய அரசுக்கு புதுப்புது பெயர்களை சூட்டி மகிழ்கிறது: அண்ணாமலை

மார்ச் 25, 2022 10:48

சென்னை: 'ஆசை காட்டி ஏமாற்றும் வேலையை அரசு செய்தால் தப்பில்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: சட்டசபையில், 110வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை படித்துள்ளார். அதில், 'தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகள் குறித்தும், அவற்றை நிறைவேற்றுவது குறித்தும், எதிர்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த அரசு ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள்தான் ஆகிறது. 10 மாத குழந்தையிடம் 10ம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்பது போல இருக்கிறது அவர்களின் கேள்விகள்' என்று, நகைச்சுவை உணர்வுடன், ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஆட்சியும் 60 மாதங்களுக்கான ஆட்சி தான். இந்த ஆட்சி முழுதுமாக நிறைவுபெற்றால் கூட, ஐந்து வயது குழந்தையாகத்தான் இருக்கும். அப்போது வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டால், 'ஐந்து வயது குழந்தையிடமா கேட்பீர்கள்' என்று ஸ்டாலின் கேட்பார் போலும். இதன் முழு அர்த்தம் என்னவென்றால், வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக அறிவிப்பு கோப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. அந்த கோப்புகள் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க போகிறது. அந்த நகர்வை முதல்வரும், அமைச்சர்களும் முனைப்புடன் கண்காணிக்க போகிறார்கள்.

நகை கடன் விஷயத்தில் 'வாங்க வாங்க நகை கடன் வாங்குங்க; வந்தவுடன் நாங்க தள்ளுபடி பண்றோமுங்க' என்று ஏலம் போட்டனர்.அப்பாவி மக்கள் தேவையே இல்லாமல் கடன் வாங்கி அல்லல்பட்டு கொண்டிருக்கும் போது, ஏன் என்று கேட்டால், பத்து மாத குழந்தையிடம் இப்படி பேசலாமா என்பார்கள். அதாவது, ஆசை காட்டி ஏமாற்றும் வேலையை அரசு செய்தால் தப்பில்லை.

மத்திய அரசின் பயனாளிகள் கூட்டம் மக்களே. மாநில அரசின் பயனாளிகள் ஆட்சியை சூழ்ந்து கொண்டிருக்கும் குழுக்களே. அரசு, மக்களை எல்லாம் மறந்து விட்ட அறிவாலயம், மத்திய அரசுக்கு புதுப்புது பெயர்களை சூட்டி மகிழ்கிறது. அந்த வகையில், தற்போது 20 சதவீத ஆட்சி காலத்தை முடித்திருக்கும் இந்த அறிவாலய அறிவிப்பு ஆட்சி, மக்கள் மதிப்பீட்டில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்