Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்: பாஜக தனித்து போட்டி

மார்ச் 29, 2022 02:51

புதுச்சேரி: என்.ஆர்.காங்., கட்சியுடன் கூட்டணியில் அங்கம் வகித்துவரும் பா.ஜ., நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது.என்.ஆர்.காங்., கட்சியின் தலைவர் ரங்கசாமி, கடந்தாண்டு மே 7ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.

அதனைத் தொடர்ந்து இரு கட்சிகளிடையே நடந்த பதவி பங்கீட்டில் நீண்ட இழுபறிக்கு பிறகு, பா.ஜ.,விற்கு சபாநாயகர் மற்றும் இரு அமைச்சர் பதவியும், என்.ஆர்.காங்., கட்சிக்கு துணை சபாநாயகர் மற்றும் மூன்று அமைச்சர் பதவி என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இலாகா ஒதுக்கீடு செய்யவில்லை.ஜூன் 27ல் அமைச்சர்கள் இலாகா இன்றி பதவியேற்றனர். நீண்ட இழுபறிக்கு பின் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல்வரின் செயல்பாடு, பா.ஜ.,வினரை அதிருப்தி அடையச் செய்தது.

இந்நிலையில், பா.ஜ., கட்சியை பலப்படுத்திட சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்க நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், முதல்வர் ரங்கசாமி மறுத்துவிட்டார். இதனால் பா.ஜ., மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் முதல்வர் மீது கடும் அதிருப்தி கொண்டனர்.இதுதொடர்பாக கட்சி மேலிடத்தில் முறையிட்டு வந்தனர். கடந்த 26ம் தேதி பா.ஜ., அகில இந்திய அமைப்பாளர் சந்தோஷ், மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில், கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு, நமது கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றனர்.அதனைத் தொடர்ந்து பேசிய மேலிட நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுமாறும், கொம்யூன் மற்றும் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்திடவும் அறிவுறுத்தினர். இந்நிலையில் நேற்று, உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது.

இதுகுறித்து பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் கூறியதாவது: புதுச்சேரியில் தற்போது நடைபெற்று வரும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் தொடரும். உள்ளாட்சி தேர்தல், கூட்டணியை கட்டுப்படுத்தாது. தமிழகத்தில் அ.தி.மு.க.,வோடு கூட்டணியில் இருந்தாலும், அங்கு கட்சி வளர்ச்சியை கருத்தில் கொண்டு உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிட்டது.

அதேபோன்று, புதுச்சேரியில் கட்சியின் பலத்தை நிரூபித்திட, நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் கூட்டணியை பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்ற பா.ஜ.,வின் முடிவால், புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்