Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்களை மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

ஏப்ரல் 01, 2022 10:37

சென்னை: 'பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகளில், அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.

மக்களை மிரட்டும் கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.,வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின், தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரின் ஆதிக்கம் மற்றும் அராஜகமும் கொடிகட்டி பறக்கிறது.

சென்னை மாநகராட்சி 34வது வார்டு கவுன்சிலர் சர்மிளா காந்தி. இவரது கணவர், வீடு கட்டும் உரிமையாளர்களை அழைத்து, மிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சி 31வது வார்டு கவுன்சிலர் சித்ராதேவியின் மைத்துனரும், திருநீர்மலை தி.மு.க., இளைஞர் அணிச் செயலருமான தினேஷ், உணவுக் கடை உரிமையாளரிடம், மாதம், 10 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டி உள்ளார்.தர மறுத்ததும், கடையை அடித்து நொறுக்கி உள்ளனர்.

மகளிர் இட ஒதுக்கீட்டை கொச்சைப்படுத்தும் நோக்கில், தி.மு.க.,வினர் செயல்படுகின்றனர். தி.மு.க.,வினரின் வசூல் வேட்டையை பார்த்து, வீட்டு உரிமையாளர்களும், வியாபாரிகளும் கலக்கம் அடைந்து உள்ளனர்.எனவே, முதல்வர் தலையிட்டு, பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகளில், அவர்களின் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் தலையிடுவதை தடுக்க வேண்டும். மக்களை மிரட்டும் கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்