Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலீஸை மிரட்டிய திமுக கவுன்சிலரின் கணவர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்

ஏப்ரல் 01, 2022 04:12

சென்னை: போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிய திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கவுன்சிலரின் கணவரை திமுக.,வில் இருந்து தற்காலிகமாக நீக்கி கட்சி தலைமை உத்தரவிட்டது.

சென்னை ராயபுரம், 51வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் நிரஞ்சனா. அவரது கணவர் ஜெகதீசன். தி.மு.க., நிர்வாகி. இந்நிலையில், ஜெகதீசன், நேற்று முன்தினம் நள்ளிரவு, ராயபுரம், ஜே.பி.,கோவில் தெருவில், தன் ஆதரவாளர்களுடன் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வண்ணாரப்பேட்டை போலீசார் தியாகராஜன், மணிவண்ணன் உள்ளிட்டோர் கும்பலாக நிற்பது குறித்து விசாரித்தனர். அப்போது, ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும், ' நான் தான் கவுன்சிலர்' என ஜெகதீசன் விதண்டாவாதம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வண்ணாரப்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் ஜெகதீசன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, பொது இடங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் வழக்கறிஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்