Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை: உத்தரவை திரும்ப பெற்ற தமிழக அரசு

ஏப்ரல் 04, 2022 10:56

சென்னை: கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை, தமிழக பொது சுகாதாரத்துறை திரும்ப பெற்றுள்ளது.

தமிழகத்தில், 2020 மார்ச்சில் கொரோனா தொற்றின் முதல் அலை பரவத் துவங்கியது. அதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது அலையையும் தமிழகம் எதிர்கொண்டது. தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பை தடுக்கும் வகையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டது. மத்திய அரசு வழங்கிய தடுப்பூசியை, பொதுமக்கள் அதிகம் போட வசதியாக, வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டன.

பொது இடங்களுக்கு செல்பவர்கள், தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதன் வாயிலாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 92 சதவீதம் பேர் முதல் டோஸ்; 75 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர்.தற்போது, நாடு முழுதும் கொரோனா தொற்று பரவல் மற்றும் உயிரிழப்புகள் குறைந்து உள்ளன.

இதையடுத்து, கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை, மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. அதன் தொடர்ச்சியாக, கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை, தமிழக பொது சுகாதாரத்துறை திரும்ப பெற்றுள்ளது. அதேநேரத்தில், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும்படி, அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குனர்களுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்