Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சொத்துவரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 05, 2022 12:00

சென்னை: தமிழக அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் வருகிற 8-ந்தேதி காலை 11 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை தமிழக அரசு 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. கொரோனா பாதிப்பு காலம் முடிந்து இப்போதுதான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் உள்ளாட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் புதிதாக பொறுப்பேற்று இருக்கிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சித் தலைவர்கள், மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தப் போகிறார்கள். அவரவர் பகுதிகளை தூய்மையாக பராமரித்து கல்வி சுகாதார திட்டங்கள் செம்மையாக செயல்படுத்தி சாலைகளை சீரமைத்து மக்களுக்கு நன்மை செய்ய போகிறார்கள் என்று எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர்.

ஆனால் கண்களை மூடிக்கொண்டு தமிழக அரசு 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி இருப்பது மக்கள் விரோத போக்காகும். இந்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். சொந்த தொழில் செய்வோர், வாடகை இடங்களில் தொழில் செய்பவர்கள், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள், வீடுகளை வாடகைக்கு விட்டு இருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

எனவே தமிழக அரசு உடனடியாக சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்தும் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் வருகிற 8-ந்தேதி காலை 11 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன, எம்.ஆர்.காந்தி, டாக்டர் சரஸ்வதி துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, சக்கரவர்த்தி, கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். அதே போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

காஞ்சிபுரம்-நாராயணன் திருப்பதி, டால்பின் ஸ்ரீதர், தாம்பரம்- கரு நாகராஜன், ஆவடி-சுமதி வெங்கடேஷ், ஜே.லோகநாதன், கடலூர்- ஏ.ஜி.சம்பத், திருச்சி-எம்.என்.ராஜா, வேலூர்-கே.எஸ்.நரேந்திரன், ஓசூர்-ஜி.கே.நாகராஜன், சேலம்-கே. பி.ராமலிங்கம், ஈரோடு- ஜி.கே.செல்வகுமார், கோவை- சி.பி.ராதா கிருஷ்ணன், திருப்பூர்- வினோஜ் பி.செல்வம், திண்டுக்கல்- எஸ்.ஆர்.சேகர், மதுரை- பொன் பால கணபதி, சிவகாசி-ஏ.ஆர்.மகாலட்சுமி, திருநெல் வேலி-சசிகலா புஷ்பா, நாகர்கோவில்- பேராசிரியர் சீனிவாசன், தூத்துக்குடி-சுப.நாகராஜன், தஞ்சாவூர்- டாக்டர் சிவசுப்பிரமணியம், கும்பகோணம்-புரட்சி கவிதாசன், கரூர்-மீனாட்சி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்