Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாங்கள் துரோகிகள் என்றால் தியாகிகள் யார்?: வைகோவுக்கு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கேள்வி

ஏப்ரல் 06, 2022 11:01

சென்னை: 'ம.தி.மு.க.,வில் உள்ள இரு துரோகிகள் யார் என்பதை, பொதுச்செயலர் வைகோ விளக்க வேண்டும்' என, அவருக்கு மூத்த மாவட்டச் செயலர் செங்குட்டுவன் கடிதம்அனுப்பியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ம.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தை, அவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட செயலர்கள் செவந்தியப்பன், சண்முகசுந்தரம் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் உட்பட, 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புறக்கணித்தனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட செயலரும், ஆட்சிமன்றக் குழு செயலருமான செங்குட்டுவன், வைகோவுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

எந்தெந்த தேர்தலில், எந்த கூட்டணி வெற்றி பெறும் என, கள நிலவரத்தை அறிந்து, உயர்நிலைக் குழுவில் விவாதித்து, தேர்தலில் போட்டியிட்டிருந்தால், பல நிர்வாகிகள் கை காசை இழந்து, வீதிக்கு வந்திருக்கும் நிலை உருவாகியிருக்காது. நீங்கள் எப்போதும் உயர்நிலைக் குழுவை கலந்து ஆலோசிக்காமல், உங்கள் முடிவை நடைமுறைப்படுத்தி வருகிறீர்கள். தற்போதும் உங்கள் முடிவை நிலை நாட்டி உள்ளீர்கள்; அது உங்களின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது.

இனிமேல் உயர்நிலைக் குழு அவசியமற்றது. உயர்நிலைக் குழுவில், ஒன்பது பேர் அங்கம் வகிக்கிறோம். நாங்கள் துரோகிகள் என்றால், தியாகிகள் யார் என்பதை தெரியப்படுத்தவும். பொதுக்குழு மேடையில், 'துரோகிகள் ஓரிருவர் இன்னும் இங்கு உள்ளனர்' என சொன்னீர்களே... அந்த இருவர் யார்? இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்