Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எஸ்.சி., எஸ்.டி. மக்களின் வீடுகளுக்கு இலவச மின்சாரம்: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

ஏப்ரல் 06, 2022 11:50

பெங்களூரு: மறைந்த முன்னாள் துணை பிரதமர் பாபுஜெகஜீவன்ராம் பிறந்த நாளையொட்டி அவரது பெயரிலான விருது வழங்கும் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு விருதுகளை வழங்கி பேசியதாவது:-

கர்நாடகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகங்களின் மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்ள அரசு மானியமாக ஒருவருக்கு ரூ.1.75 லட்சம் வழங்குகிறது. இந்த மானியம் ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். சுயதொழில் செய்யும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு உதவி செய்ய வசதியாக ஒவ்வொரு தாலுகாவிலும் பாபுஜெகஜீவன்ராம் சுயதொழில் திட்டம் அமல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தை வடிவமைத்து ஒரு மாதத்தில் செயல்படுத்தப்படும். குடீர திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு 75 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும். அரசு விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

புதிதாக தொழில் தொடங்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பாபுஜெகஜீவன்ராம் விசுவாசம், நேர்மையின் சின்னமாக விளங்கினார். கிராமப்புறங்களில் நில உரிமை உள்ளவர்களுக்கு சமூக மரியாதை கிடைக்கிறது. ஆதிதிராவிடர், பழங்குடியின சமுதாயத்தினரின் நலனுக்காக நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமல்படுத்தப்படும் நில உரிமை திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இதுவரை ரூ.15 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த மானியத்தை ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டம் மூலம் அந்த சமூகத்தினருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வி, வேலை, சமூக கவுரவம், அவகாசங்கள் கிடைத்தால் மட்டுமே சமூகங்கள் முன்னிலைக்கு வர முடியும். அப்போது தான் நாடு முழுமையான வளர்ச்சி பெறும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

தலைப்புச்செய்திகள்