Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 16 கோடி போதை பொருள் பறிமுதல்

ஏப்ரல் 06, 2022 12:00

தூத்துக்குடி: போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர் படகினை தேசிய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள், கடல் அட்டை போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருட்களும், கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களும் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இதேபோல் செம்மரக் கட்டைகள், திமிங்கலம் வாயில் இருந்து உமிழக்கூடிய ‘அம்பர்கிரீஸ்’ என்ற பொருளும் கடத்தப்பட்டு வருகிறது.இதைத் தொடர்ந்து கடலோர காவல்படையினரும், உள்ளூர் போலீ சாரும் தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, கியூ பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பொருட்களை பறிமுதல் செய்வதுடன் அதில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தப் படுவதாக தேசிய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரி கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கடற்கரை பகுதியில் நின்றிருந்த ஒரு பைபர் படகில் சோதனையிட்டனர்.

அப்போது அதில் போதை பொருளான ஐஸ் எனப்படும் கிறிஸ்டல் மெத்தாம் பெட்டமைன் 5 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 16 கோடி ஆகும்.

இதையடுத்து படகை ஓட்டிவந்தவர் மற்றும் 2 பேர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர் படகினை தேசிய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது போதை பொருளை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கொண்டு சென்று பின்னர் அங்கிருந்து வளைகுடா நாட்டிற்கு கடந்த திட்டமிடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போதை பொருளை கடத்தி செல்ல திட்டமிட்ட கும்பல் யார்-யார்? இவர்கள் எங்கிருந்து இதனை கடத்தி வந்தனர்? என தொடர்ந்து தேசிய வருவாய் புலனாய்வுதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய படகோட்டி மற்றும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்