Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குருவாயூர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது

ஏப்ரல் 11, 2022 11:16

திருவனந்தபுரம்: கேரளாவில் குருவாயூர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நேற்று முன்தினம் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இரவு 9.30 மணி அளவில் ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், குருவாயூர் கோவிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

உடனே போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த பக்தர்களை வெளியேற்றிவிட்டு கோவில் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் பல மணி நேரம் தேடியும் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அதன்பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும்புரளி என தெரியவந்தது.

இதையடுத்து மிரட்டல் விடுத்தவர் யார்? என்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதில் மிரட்டல் விடுத்தவர் குருவாயூரை அடுத்த நென்மேனி பகுதியை சேர்ந்த சஜீவன் என தெரியவந்தது.

அவரை போலீசார் இரவோடு இரவாக கைது செய்தனர். சஜீவன் குடிபோதையில் கோவிலுக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் குருவாயூர் கோவிலில் பிம்ப சுத்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சடங்குகள் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.இன்று காலை தீபாராதனை முடிந்து இரவு 9.30 மணி வரையிலும், நாளை காலை 10 மணி வரையிலும் பிம்ப சுத்தி நடைபெறுகிறது.

இதன் காரணமாக இன்றும் நாளையும் தரிசனத்திற்கு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் வெளிபிரகாரத்தில் நின்று தரிசனம் செய்ய தடையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்