Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத பிரச்சினைகளை பாஜக தூண்டிவிடுகிறது: குமாரசாமி குற்றச்சாட்டு

ஏப்ரல் 11, 2022 11:32

பெங்களூரு: தீவிரமான விவகாரங்களில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மென்மையாக செயல்படுகிறார். இந்த ஆட்சியை சிலர் 'ரிமோட்' மூலம் இயக்குகிறார்கள் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

 உடுப்பியில் 6 முஸ்லிம் மாணவிகளால் ஹிஜாப் விவகாரம் தொடங்கியது. இதை அங்கே தீர்வு கண்டிருந்தால் இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவி இருக்காது. ஆனால் அரசே அந்த விவகாரம் பிற பகுதிகளிலும் பரவ அனுமதித்தது. ஹலால் இறைச்சி வாங்க வேண்டாம் என்று சில இந்து அமைப்புகள் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தன. அதை அரசு கண்டுகொள்ளவில்லை.

ஆனால் மக்கள் ஹலால் இறைச்சிக்கு எதிரான பிரசாரத்தை மக்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்து கோவில்களின் அருகே முஸ்லிம் வியாபாரிகள் கடைகளை வைக்க அனுமதி இல்லை என்று பிரசாரம் செய்தனர். இது தொடர்பான சட்டத்தை கடந்த 2002-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக சட்டசபையில் அரசு கூறியது. இந்த சட்டத்தை பா.ஜனதா தனது முந்தைய ஆட்சி காலத்தில் ஏன் அமல்படுத்தவில்லை.

தீவிரமான விவகாரங்களில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மென்மையாக செயல்படுகிறார். இந்த ஆட்சியை சிலர் 'ரிமோட்' மூலம் இயக்குகிறார்கள். அரசு தனது பொறுப்புகளில் இருந்து விலகி கொள்கிறது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசு முயற்சி செய்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கூட கோலார், ராமநகரில் விவசாயிகளிடம் முஸ்லிம் வியாபாரிகள் மாம்பழம் கொள்முதல் செய்கிறார்கள்.

இந்துக்கள் ஓட்டுகளை ஒருங்கிணைக்கவே மத பிரச்சினைகளை பா.ஜனதா தூண்டி விடுகிறது. ஆனால் இது அக்கட்சியையே திருப்பி தாக்கும். பா.ஜனதா மக்கள் பிரச்சினைகளை விடுத்து மத பிரச்சினைகளை தூண்டிவிடுவதை மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

தலைப்புச்செய்திகள்