Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு

ஏப்ரல் 13, 2022 11:37

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு நடைபெறும் பயிற்சி வகுப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பங்கேற்று பேசுகிறார்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், கடந்த 2 நாட்களுககு முன்பு மாமன்ற கூட்டத்தை நடத்தி உள்ளனர்.

 தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் மாமன்ற கூட்டம் நடந்தாலும் பெரும்பாலான மேயர்கள் இந்த பதவிக்கு புதிது என்பதால் மன்ற கூட்டத்தை எப்படி நடத்தி செல்ல வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு முழுமையாக விதிகள் பிடிபடவில்லை.

இதேபோல் நகராட்சி மன்ற கூட்டங்களிலும் பல தலைவர்களுக்கு கூட்டம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

இதையொட்டி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கு நிர்வாக பயிற்சி கொடுக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் சென்னை, தாம்பரம், ஆவடி உள்பட 21 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், 190 நகராட்சி தலைவர்கள், 190 நகராட்சி துணை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி வகுப்பை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து பேசினார். அப்போது மாமன்ற கூட்டம் நடத்துவது தொடர்பான கையேட்டினையும் அவர் வெளியிட்டு விளக்கம் அளித்தார். இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

இதில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, ஆர்.எஸ்.பாரதி எம்.பி. எஸ். ஆர்.ராஜா எம்.எல்.ஏ. உள்பட பலர் பங்கேற்று பேசினார்கள்.

இன்று மாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். அப்போது மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் பற்றி பல்வேறு ஆலோசனை வழங்க உள்ளார்.

தலைப்புச்செய்திகள்