Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக சட்டசபை மாண்பை கவர்னர் மதிக்கவில்லை: திமுக அமைச்சர்கள் குற்றச்சாட்டு

ஏப்ரல் 14, 2022 02:50

சென்னை: நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக கவர்னர் எந்தவித கால வரையறையோ, உத்தரவாதத்தையோ அளிக்கவில்லை என கவர்னர் ரவி உடனான சந்திப்பிற்கு பிறகு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளனர்.

சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னர் ரவியுடன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (ஏப்.,14) சந்தித்து பேசினர். நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பிற்கு பிறகு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே திமுக அரசின் கொள்கை. இதற்காக அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் நீட் விலக்கு குறித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், நீண்ட காலமாக கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் 208 நாட்களுக்கு பிறகு திருப்பி அனுப்பினார். மீண்டும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளிக்குமாறு, முதல்வரும், அமைச்சர்களும் கவர்னரை நேரில் சென்று வலியுறுத்தினோம். அரசியலமைப்பு சட்டத்தின்படி, மீண்டும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக கவர்னர் ரவி உறுதியளித்தார். ஆனால், மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பாமல் இன்னும் கிடப்பில் வைத்துள்ளார். பல முறை அழுத்தம் கொடுத்த பிறகும் கவர்னர் நீட் மசோதாவை கிடப்பில் வைத்துள்ளார்.

நீட் மசோதாவை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என கோரினோம். ஆனால், அனுப்பி வைப்பதற்கான கால வரையறையோ, உத்தரவாதத்தையோ கவர்னர் தெரிவிக்கவில்லை. தமிழக சட்டசபை மாண்பையும், மக்களையும் கவர்னர் மதிக்கவில்லை. இதனால், இன்று மாலை கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு விழாவில் பங்கேற்காமல் திமுக புறக்கணிக்கிறது. இதில் முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க போவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்