Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய வைரஸ் வந்தால் அச்சப்பட தேவையில்லை; தமிழகத்தில் 88 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: அமைச்சர்

ஏப்ரல் 17, 2022 12:00

கோவை: ''தமிழகத்தில், 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. புதிய வைரஸ் வந்தாலும் அச்சப்பட தேவையில்லை,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

கோவை அரசு மருத்துவமனையில், 'ஹீமோபீலியா' தினவிழா நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார். தமிழகம் முழுதும், 32 அரசு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, 87.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் பணிகளையும் அமைச்சர் துவக்கி வைத்தார். அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில், 1,800 பேர் ஹீமோபீலியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவையில் மட்டும், 360 பேர் ஹீமோபீலியா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தின் சார்பில், மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில், தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள மருத்துவ படிப்பிற்கான இடங்களை நிரப்ப, மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். தமிழகத்தை பொறுத்த வரை, நாளொன்றுக்கு நோய் பாதிப்பு எண்ணிக்கை, 22க்கும் கீழ் குறைந்து வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகம் இறப்பு இல்லை. முதல் டோஸ் 92.38 சதவீதம், இரண்டாம் டோஸ் 77.28 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் தவணை தடுப்பூசி அரசு மருத்துவனைகளில் இலவசமாக செலுத்த வேண்டுமென, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். தற்போது கொரோனா வைரசை விட, 10 சதவீதம் வேகமாக பரவும் வகையில், 'எப்சிலோன்' வைரஸ் உருவாகி உள்ளது. லண்டனில் 600க்கும் மேற்பட்ட நபர்களை வைரஸ் பாதித்துள்ளது. இந்தியாவில் மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி, 88 சதவீதம் பேருக்கு அதிகரித்துள்ளது. அதனால், புதிய வைரஸ் வந்தாலும் அச்சப்பட தேவையில்லை.

முககவசம் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற செயல்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா, கோவை அரசு மருத்துவ கல்லுாரி டீன் நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்