Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு; உடனடி நடவடிக்கை தேவை: அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

ஏப்ரல் 20, 2022 11:24

சென்னை : தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எப்போதும் இல்லாத அளவுக்கு சீர்குலைந்து உள்ளதை தொடர்ந்து, பெரும் கவலையுடன், இந்த கடிதத்தை எழுதுகிறேன். தமிழக கவர்னருக்கு எதிரான போராட்டம், திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2019 செப்டம்பரில், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது நடந்த போராட்டங்களை போன்றே இதுவும் நடத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சட்டவிரோதமான வழிகளில், அரசமைப்பு சட்டத்தை அச்சுறுத்த தி.மு.க., நினைக்கிறது. இந்த போராட்டத்தின்போது, 'கொலைகார கவர்னர்' என, கோஷம் எழுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவர்னர் உடன் சென்ற வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டபோது, கூட்டத்தை கலைக்காமல், போலீசார் இருந்துள்ளனர்.

கடமை தவறிய போலீஸ் அதிகாரிகள், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும். இந்த சம்பவம், தமிழகத்தின் சட்டம்- - ஒழுங்கு சீர்குலைவுக்கு எடுத்துக்காட்டு. தங்கள் அரசியல் பாதை வீழ்ச்சி அடையும் போதெல்லாம், இதுபோன்ற வன்முறை போராட்டங்களை முன்னெடுப்பது, தி.மு.க.,வின் வழக்கம். நிலைமையை ஆராய்ந்து, இந்த வன்முறை போராட்டத்தை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்