Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பழைய பார்த்திபன் சாரை திரும்ப பார்க்கனும் சார்...!  பார்ப்பேன்னு நம்புறேன் சார்...

ஏப்ரல் 21, 2022 08:17

பழைய பார்த்திபன் சாரை திரும்ப பார்க்கனும் சார்...!  பார்ப்பேன்னு நம்புறேன் சார்...

இன்று சமூக வலைதளங்களில் பத்திரிகை துறையைச் சேர்ந்த பலராலும் இரங்கல் கூறப்பட்டு பதிவுகளால் நிரம்பி வருகிறார் தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் திரு.பார்த்திப மகாராஜன் சார் அவர்கள். அவர் ரொம்ப நல்லவர், ரொம்ப ரொம்ப நல்லர், சிறந்தவர் அப்டி இப்டின்னு அளவிட்டு சொல்ல முடியாது. மிக சிறந்த மனிதர் என்கிற வார்த்தைக்கு சொந்தக்காரர் அவ்வளவுதான். அவர் நடக்கும்போது காலடியில் எறும்பு பட்டாலும் அதற்கு வலிக்காது, ஏன்னா அவர் நடை அப்படி, சிரிப்பு, பார்வை, பேச்சு சொல்லிகிட்டே போகலாம்.. 

ஒருவர் மீது நான் அளவுக்கு அதிகமான மரியாதை வைத்தால் அவர்களிடம் பேசுவது மிகக் குறைவு.  மரியாதை குறைந்துவிடுமோ என்கிற ஒரு எண்ணம் எனக்கு உண்டு. அதனால் பார்த்திபன் சாரிடம் தினமலர் அலுவலகத்தில் பணி புரியும்போது பேசியதோடு, அதன்பிறகு கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே பேசியிருக்கிறேன்... நான் வாழும் காலம்வரை இந்த துறையில் மறக்க முடியாத. மரியாதைக்குரிய மிக உயர்ந்த மனிதராக நான் நினைத்தது, நினைப்பது, நினைக்க போவது பார்த்திபன் சாரை மட்டும்தான்...

நான் இந்த துறையில் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்றாலும் என்னால் முடிந்த சின்ன சின்ன விஷயங்களை செய்து வருகிறேன். எனக்கு இவர் சொல்லிக் கொடுத்தார், அவர் சொல்லிக் கொடுத்தார்ன்னு சொல்ற அளவுக்கு யாருமே இல்லைன்னு நான் சொல்வேன். விழுந்தாலும் நானே.. எழுந்தாலும் நானேங்கற அளவுக்குதான் என் நிலை... அவ்வளவுதான்... ஆனாலும் எனக்கும் ஒரிரு செய்தி எழுத கற்றுக்கொடுத்த ஒரு நபர் இருந்தார் என்றால் அது திரு.பார்த்திபன் சார்தான்...

திரு.பார்த்திபன் சார் பற்றிய ஒரு நினைவுக்கான ஒரு சிறு செய்தி....

இன்று நினைத்தாலும் அதை சிந்திக்க நினைப்பதோடு சிரிப்புதான் வரும்.. அதை சொன்னாலும் எல்லாருமே சிரிப்பார்கள்தான்.... ஆனால் பார்த்திபன் சார் மட்டும் அப்பக்கூட இயல்பாகவேதான் இருந்தார்.....

சென்னை அரசு பொது மருத்துவமனை பற்றிய ஒரு செய்தி (ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை)
ஒரு செய்தி அடிச்சு கொடுத்தாச்சு.. அந்த செய்தியின் புகைப்படத்திற்கான விளக்கம்....

அரசு மருத்துவமனையின் (துறை ஞாபகம் இல்லை) அதை எழுதிவிட்டு, அங்கு திரும்பும் இடத்தில் எல்லாம் சிறுநீரகங்களாகவே உள்ளது என்று எழுதி... பேப்பரை கொடுத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டு திரும்பி வந்தேன்.

என்ன சசிரேகா, உலக அளவுல பேசப்படக்கூடிய மிகப்பெரிய செய்திய கொடுத்து இருக்கீங்க. எவ்வளவு பெரிய செய்தி, உங்களுக்கு எப்படி இந்த செய்தி கிடைத்து.. அப்டி இப்டின்னு சார் பேசுறார்.. எனக்கு ஒன்னுமே புரியலை. சென்னை வந்த புதுசு.. என்னடா இது என்னமோ சார் சொல்றார், ஏதோ தப்பு இருக்கு என்னான்னு தெரியலையேன்னு, பே பேன்னு முழிக்கிறேன்.. சசிரேகா இந்த புகைப்பட விளக்கத்தை இன்னொரு முறை நல்லா படிச்சுட்டு எழுதிக் கொடுங்கன்னு சொன்னார், திரும்பவும் அதே தப்பு, பேப்பரை கிழிச்சு போட்டார், திரும்பவும் எழுத சொன்னார், திரும்பவும் தப்பு பேப்பரை கிழிச்சு போட்டார்.. இப்படி 5 முறை ஆனது. அடுத்து இங்க வாங்க, நல்லா படிங்க இதைன்னு 3 முறை படிக்க சொன்னார், மூன்றாவது முறை படிக்கும்போது சரியா மெதுவா உச்சரிப்போடு படிக்க சொன்னார், இப்போது சரியா சொல்லுங்க சிறுநீரகங்களா, என்னான்னு சரியா சொல்லுங்கன்னு அவரே எடுத்துக் கொடுத்தார்.. அப்போதுதான் சொன்னேன்.. சிறுநீராகவே இருந்தது என்று.... அதோடு சரி... அப்பறம் சார்ட்ட மாட்டுவேனா.. நல்லபுள்ளை மாதிரி வந்துட்டு, நல்ல புள்ளை மாதிரி மாட்டாம ஓடியே போய்டுவேன்...

ஆனால் இப்ப சொல்றேன்... அவர் சொல்வதை சரியாக கேட்டு, அவர்கிட்ட செய்தி எழுத கற்றுக்கொண்டு இருந்திருந்தால் இன்று நானும் அவர் பெயர் சொல்லும் அளவிற்கு, ஒரு நல்ல சிறந்த பத்திரிகையாளரா உருவாகியிருப்பேன்... அதாவது எழுதுவதில் மட்டும் சொல்கிறேன்.. மற்ற விஷயத்தில் பார்த்திபன் சார் வழியில் அன்றும், இன்றும், என்றும்...

ஒரு சிறு நிகழ்வு...

சென்னை கன்னிமாரா ஹோட்டலில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. ஒரு கல்லூரி நிறுவனர் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து அனைவருக்கும் சன்மானமாக கவர் கொடுத்தார். (எல்லோரும் கொடுப்பதுதான், அதை வாங்குபவர்களை நான் குறை சொல்லவில்லை, நான் வாங்கியதும் இல்லை, வாங்கவும் மாட்டேன் அவ்வளவுதான்) நான் வாங்க மாட்டேன் என்று அந்த சந்திப்பு நடத்தியவருக்கு தெரியும். அதனால் பிரஸ் மீட் முடிந்து வெளியில் வரும்போது என்னம்மா, எப்டிம்மா இருக்கன்னு சொல்லிட்டு, உட்காருங்ம்மான்னு சொல்லி, இந்த விளக்கத்தையும் சேர்த்து தினமலர்ல்ல போடுங்கம்மான்னு சொல்லிட்டு இரண்டு பேப்பர் கொடுக்க, அதுல ஒரு 500 ரூபாய் இருக்க... அதை பார்த்தவுடன் கை, கால் எனக்கு நடுங்கிட்டு. (இப்போது அப்படி கொடுத்தால்,  இந்தாங்க வச்சுக்கோங்கன்னு சொல்லி அவங்க பாக்கெட்ல வச்சுடுவேன். ஆனால் இது நடந்தது சென்னை வந்த புதிதில சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு)
டபக்குனு எடுத்து அந்த காசை அவர்கிட்டயே டக்கு போட்டுட்டு வேக வேகமா பதட்டத்தோடு ஆபீசுக்கு வந்துட்டேன்.

இது பார்த்திபன் சாருக்கு தெரிந்துவிட்டது. பணம் கொடுத்தது, நான் திருப்பி போட்டது எல்லாமே.. ஆனால் அவர் என்னை அழைத்து என்ன சசிரேகா... பிரஸ்மீட் முடிந்ததா.. என்றார், முடிஞ்சது சார்ன்னு சொன்னேன்.. செய்தி அடிச்சுக் கொடுத்தீங்களா.. கொடுக்குறேன்னு சொன்னேன்.. அவர் எதாவது கொடுத்து செய்தி போட சொன்னாரா என்றுதான் கேட்டார்.. அவ்வளவுதான்.. எனக்கு அழுகை வர, சார் நான் வாங்கலை சார், திருப்பி கொடுத்துட்டேன் சார் அப்டி இப்டின்னு அழுதுகிட்டே சொல்ல, சரி இதுமாதிரி போற இடங்களில் இருக்கும் பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டார். (நான் வாங்கலை என்பது அவருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது).

உடனே ஆபு அண்ணனுக்கு போன் அடிச்சு என்னைய போய் இப்டி சார் கேட்டுட்டார்ன்னு சொல்லி அழுது புலம்பி தள்ளிட்டேன். அட ஏம்மா, அவர் சும்மா எதாவது கேட்டுருப்பார்... அவரை நீ பேசவே விடாம அழுதுருப்ப... என்னா சொல்றார்னு கேட்டுட்டு பதில் சொல்லி இருக்க மாட்ட. சரி விடு பேசிக்கலாம்னு சொல்லிட்டு. (ஆபு அண்ணன்.. ஆபிரகாம் லிங்கன்,மூத்த பத்திரிகையாளர், என் அன்புகுரிய அண்ணன்) மறுநாள் பார்த்திபன் சாரை ஒரு கலவர கண்ணோடு, பயமாக நான் பார்க்க அவர் பாட்டுக்கு  சிரிச்சுகிட்டே தலையாட்டிட்டு போய்ட்டார்.. அப்பறம்தான் தெரிந்தது,  அந்த பிரஸ்மீட்டில் நடந்தது என்னான்னு சாருக்கு முன்பே தெரியும் என்று... அடடே நாமதான் அழுதுட்டோமோன்னு நினைச்சு சாரை பார்க்கவே கொஞ்ச நாள் எனக்கு ஒரு மாதிரியாகாவே இருச்சு...

அப்பறம் அப்டியே சிரிச்சுகிட்டு போய்டுவேன்.... தினமலரை விட்டு வெளியே வந்து சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு மங்கையர் சிகரம் என்கிற இதழ் ஆரம்பித்த புதிதில் முதல் மாத இதழை சாருக்கு அனுப்பினேன்.. இதழ் கையில் கிடைத்த உடனே சார் எனக்கு போன் செய்துள்ளார். நான் வண்டியில் சென்றதால் தெரியவில்லை. மீண்டும் சிறிது நேரம் கழித்து போன் அடிக்க, நான் சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு, யாரென்றே தெரியாமல் எடுத்து பேச ஆரம்பிக்க, டக்குனு பார்த்திபன்னு சொன்னவுடன் டக்குனு அப்டியே ஒன்னுமே பேச வரலை.. சார் சார் சொல்லுங்க சார்ன்னு கூற, உடனே அவர் வாழ்த்து சொல்லி, இதழ் தொடர்பாக எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கவும் என்று நல்ல செய்க என்று திரும்பவும் மகிழ்ச்சியோடு வாழ்த்து கூறினார். எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.  அதுதான் சார் எனக்கு கொடுத்த பெரிய விருது மாதிரி... அதன்பிறகு சாரை தொடர்பு கொள்ளவே இல்லை... சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கொடுக்க சென்றபோதுதான் பார்த்தேன்... .. பார்த்தவுடன் ஒருவித பதட்டமாகிட்டேன்.. சார் என்ன சார் என்ன ஆச்சு சார் உங்களுக்கு என்று... 

மிக மிக உடல் இளைத்து... முகமே மாறிபோய் இருந்தது. அதன்பிறகுதான் தெரிந்தது அவருக்கு இடையில் உடல்நிலை சரியில்லாமல் போனது என்று....

அன்று சொன்னேன்.. சார் நான் பழைய பார்த்திபன் சாரை பார்க்கனும்.. பார்ப்பேன்னு நம்புறேன்னு சொல்லிவிட்டு வந்தேன்... 

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரின் உறவினர் ஒருவர் மூலம் சார் எங்கு இருக்கிறார் என்று விசாரித்தேன், அந்த உறவினர் நான் விசாரித்ததை சாரிடம் கூறியதாகவும், சாரும் என்னைப்பற்றி பேசியதாகவும் கூறினார். 

ஆனால் இன்று விடியற்காலை வந்த செய்தி.. 

இனி பழைய பார்த்திபன் சாரை அல்ல.. பார்த்திபன் சாரையே பார்க்க முடியாது என்று.. ரொம்ப மனதுக்கு கஷ்டமாகிவிட்டது.. 

முதல் இதழுக்கு அவர் கொடுத்த உற்சாகம், வாழ்த்து இன்றும் என் நினைவில்... ஆனால் அதன்பிறகு எவ்வளவோ கஷ்டப்பட்டு அதைவிட நேர்த்தியாக இதழ் கொண்டு வந்தும் அவரை சந்திக்காமல் விட்டுவிட்டோமே என்கிற வருத்தம் ஒருபுறம்....

யார் மீதாவது அதிகமான மரியாதை வைத்தால் அவர்களிடம் மிக மிக குறைவாகவே பேசுவேன், சந்திப்பேன்.. அந்த மரியாதைக்குரிய சிலரில் பார்த்திபன் சாரும் இருந்ததாலயோ என்னவோ.. அவரிடமும் தினமலர் நிறுவனத்தை விட்டு வெளியில் வந்தபிறகு பேசாமல் விட்டுவிட்டேன்....

ஆனால் ஒன்னு சார்.. நான் உங்களை போல் அன்றும், இன்றும், என்றும் ஸ்டைட் பார்வேர்டுதான்.. அதுல மாற்றமே இல்லை....

சார்.. நான் பழைய பார்த்திபன் சாரை திரும்ப பார்க்கனும் சார்... பார்ப்பேன்னு நம்புறேன்.... 

நம்பிக்கை வீணாகிட்டு சார்.. ..ஏமாத்திட்டீங்களே.....!

தலைப்புச்செய்திகள்