Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக முழு விசாரணை தேவை: அண்ணாமலை

ஏப்ரல் 23, 2022 11:07

கோவை: ''தமிழகத்தில் கவர்னருக்கே பாதுகாப்பான சூழ்நிலை இல்லை; சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது?'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் அண்ணாமலை அளித்த பேட்டி:
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. மத்திய அரசின் மின்சாரம் வரவில்லை என, அமைச்சர் செந்தில் பாலாஜி பொய் கூறி வருகிறார்.

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 777 மில்லியன் டன். 2.2 கோடி டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. இது ஒரு மாதத்திற்கு போதுமானது.துாத்துக்குடியில் ஏப்., 20 முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு நிலக்கரி இருப்பு இருந்தது; ஆனால், நான்கு மின் உற்பத்தி நிலையங்களை தமிழக அரசு நிறுத்தியது. தமிழத்தில் உள்ள ஐந்து அனல் மின் நிலையங்களில் 85 சதவீதம் உற்பத்தி இருக்கும்போது மட்டுமே 82 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. தற்போது 57 சதவீதம் மட்டுமே இருக்கும்போது 50 ஆயிரம் டன் நிலக்கரி போதுமானது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் 10 மணி நேரம் மின்வெட்டு இல்லை. தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக விசாரணை கமிஷன் வைத்து முழு விசாரணை நடத்த வேண்டும். மின்வாரியத்தின் செயல்பாடுகளை 2006 முதல் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சென்னையில் மூன்று நாட்களுக்கு முன் விக்னேஷ் என்ற இளைஞர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் இறந்தார். காவல்துறை கஸ்டடி மரணம் இல்லை என்றால் எதற்காக அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்? மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், கவர்னர் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் கவர்னருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது? இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டிய அவசியம் இப்போது இல்லை. அவர், 'பாரத ரத்னா' விருது வாங்கட்டும்; அதன்பின் நடத்தலாம்.இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்