Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிப்பு

ஏப்ரல் 24, 2022 12:45

கோவை: முககவசம் அணியாமல் சுற்றியவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதித்தனர். மேலும் பஸ் நிலையங்களில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.

கோவையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று மிகவும் குறைந்து காணப்படுகிறது. ஒருநாள் பாதிப்பு 2, 3, என்று ஒற்றை எண்ணிக்கையிலேயே பதிவாகி வந்தது. மேலும் தொற்று குறைந்ததால் மாவட்டத்தில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. இருப்பினும் முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியது.

ஆனால் மக்கள் தொற்று குறைந்ததன் காரணமாக முக கவசம் அணிவதை மறந்து இயல்பாக சுற்றி திரிந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்திலும் குறைந்திருந்த தொற்று பாதிப்பு கடந்த 2 நாட்களாக மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. இதையடுத்து அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி இனி கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது.

கோவை மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகர பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் முழு வீச்சில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகரில் மக்கள் அதிகம் கூடும் காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், சிங்காநல்லூர், உக்கடம் பஸ் நிலையம், மார்க்கெட்டுகள், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூட கூடிய இடங்களில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு இருந்த மக்களிடம் கொரோனா தொற்று குறித்தும், முக கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கினர். மேலும் முககவசம் அணியாமல் சுற்றியவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதித்தனர். மேலும் பஸ் நிலையங்களில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்தனர். முக கவசம் அணியாத ஊழியர்களுக்கு அபராதமும் விதித்தனர்.

இதற்கிடையே முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி மேயர் கல்பான தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் அனைத்து வணிக நிறுவனங்களும் கொரோனா விதிமுறையை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்