Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் பிரதமர் மோடி: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

ஏப்ரல் 28, 2022 12:54

சென்னை: பெட்ரோல்,டீசல் விலை தொடர்பாக பிரதமர் பேசியுள்ளது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பது தொடர்பாக, மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "மக்கள் மீதான பெட்ரோல், டீசல் விலை உயர்வு சுமையை குறைப்பதற்காக, கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அவற்றின் மீதான உற்பத்தி வரியைக் குறைத்தது. இதேபோன்று, மாநிலங்களும் உள்ளூர் வரியை குறைத்து மக்களுக்கு அந்தப் பலன் போய்ச் சேர உதவ வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. சில மாநிலங்கள் வரியை குறைத்தன. ஆனால், சில மாநிலங்கள் மக்களுக்கு எந்தப் பலனையும் வழங்கவில்லை. இதன் காரணமாக, அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகமாக உள்ளது. இது இந்த மாநிலங்களின் மக்களுக்கு செய்கிற அநீதி மட்டுமல்ல, இது மற்ற மாநிலங்களிலும் தீங்கு ஏற்படுத்துகிறது. மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சில காரணங்களுக்காகவோ, பிற காரணங்களுக்காகவோ மத்திய அரசு சொன்னதைக் கேட்கவில்லை. எனவே, அந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து சுமையை அனுபவித்து வருகின்றனர்" என்றார்.

இதற்கு விளக்கம் அளித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பதற்கான வழி வகையைக் காணவில்லை என்று பிரதமர் பேசியுள்ளார். மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றும், மாநில அரசுக்கு விதிக்கும் வரிகளைக் குறைக்காத காரணத்தால் தான் விலையை குறைக்க முடியவில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒரே வரியில் கூற வேண்டும் என்றால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அவரின் கருத்தைச் சொல்லி உள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு கச்சா எண்ணெய் விலை சரிந்து கொண்டே இருந்தாலும், அதற்கு ஏற்றது போல் விலையைக் குறைக்காமல், இதன் மூலம் கிடைத்த உபரி வருவாயை தனதாக்கிக் கொண்டது மத்திய அரசு.

மாநில அரசுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய வரியைக் குறைத்து, மாநில அரசுக்கு தர வேண்டிய வரியை குறைக்காமல், கடுமையாக வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை திணித்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை முழுவதும் தனது ஆக்கி கொண்டது மத்திய அரசு. சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள காரணத்தால் பாசாங்கு காட்டுவது போல் இந்த தேர்தலுக்கு முன்பாக வரியைக் குறைத்து வேடம் போட்டது மத்திய அரசு. தேர்தல் முடிந்த பின்பு விலையை உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை உயர்த்தியது மத்திய அரசு. ஆனால் தேர்தல் முடிந்த பின்பு வாக்குறுதி அளித்தபடி படி மத்திய அரசு குறைப்பதற்கு முன்பாக வரியை குறைத்தது மாநில அரசு. இவை அனைத்தும் தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். யார் பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மையில் முனைப்பு காட்டுகிறார்கள், யார் குறைப்பது போல் நடித்து பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள் என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்" என்று தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்