Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திராவில் 10ம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: ஆசிரியர்கள் உள்ளிட்ட 12 பேர் கைது

ஏப்ரல் 29, 2022 10:55

திருப்பதி: ஆந்திர மாநில கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் 10 ஆசிரியர்கள் 4 அறை கண்காணிப்பாளர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது.

முதல் நாள் தெலுங்கு பாட தேர்வு நடந்தது. கர்னூலில் உள்ள அரசு பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. அப்போது மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டன.

அதே பள்ளியில் வேலை செய்யும் கிளர்க் ஒருவர் பொதுத் தேர்வு வினாத்தாளை தனது செல்போனில் போட்டோ எடுத்து அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் 3 பேருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார். ஆசிரியர்கள் கேள்விக்கு ஏற்ற பதிலை எழுதி அறைகளில் தேர்வு எழுதும் மாணவர்களிடம் சேர்க்கும்படி குடிநீர் சப்ளை செய்யும் மாணவர்களிடம் கொடுத்து அனுப்பினர்.

மாணவர்களும் ஆசிரியர்கள் எழுதிக் கொடுத்த கேள்விக்கு உண்டான பதிலை எழுதினர். வாட்ஸ் அப்பில் வந்த கேள்வித்தாளை ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த ஆசிரியர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினர்.

இதனால் ஸ்ரீகாகுளம், கர்னூல், விஜயவாடா, சித்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கேள்வித்தாள் வெளியானது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஆந்திர மாநில கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் 10 ஆசிரியர்கள் 4 அறை கண்காணிப்பாளர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி 10 ஆசிரியர்கள் உள்பட 12 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்