Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளி மாணவியை கன்னத்தில் அறைந்த அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

ஏப்ரல் 29, 2022 11:21

சேலம்: சேலத்தில் அரசு பஸ் கண்டக்டர் மீது பள்ளி மாணவி ஒருவர் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் அந்த பஸ் சாரதா கல்லூரி சாலையில் வந்தது.

 அப்போது, பள்ளி மாணவிகள் பஸ்சில் ஏறினர். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மாணவிகளால் உள்ளே செல்ல முடியவில்லை.

பஸ் கண்டக்டர் உள்ளே போகுமாறு சத்தம் போட்டு, மாணவிகளை உள்ளே தள்ளி விட்டதுடன் ஆபாசமான வார்த்தைகளால் பேசி, திடீரென ஒரு பிளஸ்-2 மாணவியின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தட்டிக்கேட்ட சக தோழிகள் 2 பேரையும் தகாத வார்த்தையால் திட்டினார்.

இந்த நிலையில் பஸ் அஸ்தம்பட்டி அருகில் சென்றதும், பஸ்சில் இருந்து இறங்கிய பிளஸ்-2 மாணவி, தனது 2 தோழிகளுடன் சென்று அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் பஸ் கண்டக்டர் அடித்த விஷயத்தை கூறினர்.

இதையடுத்து அங்கிருந்த போலீசார், மாணவிகளை அழகாபுரம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்று மாணவிகள், கண்டக்டர் மீது துணிச்சலாக புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார், விசாரணை நடத்தியதில் மாணவிகளை திட்டி அடித்தது எருமாபாளையம் பணிமனையில் பணியாற்றி வரும் அரசு பஸ் கண்டக்டர் மகாலிங்கம் என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், இது பற்றி சேலம் கோட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து கண்டக்டர் மகாலிங்கத்தை சஸ்பெண்ட் செய்து, சேலம் கோட்ட பொது மேலாளர் மோகன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்