Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடிகாரம் ஓடும் முன் ஓடு என்ற பாடலுக்கு ஏற்ப உழைத்து வருகிறேன்: முதல்வர் ஸ்டாலின்

ஏப்ரல் 30, 2022 12:20

தேனி: கடிகாரம் ஓடும் முன் ஓடு என்ற பாரதிதாசன் பாடலுக்கு ஏற்ப உழைத்து வருகிறேன் என தேனியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தேனியில் நடந்த அரசு விழாவில், ரூ.114.21 கோடியில் நிறைவு பெற்ற 40 திட்ட பணிகளை துவக்கி வைத்தும், ரூ.74.21 கோடியில் 102 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: வரலாற்றில் இடம்பெற்றிருக்க கூடிய சிறப்புகளை பெற்றது தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை திமுக செயல்படுத்தி உள்ளது. மக்களுக்கான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு தனிமனித தேவையையும் பூர்த்தி செய்வதே அரசின் இலக்கு. மக்களின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியே எங்களின் செயல்பாட்டிற்கு ஊக்கமாக உள்ளது.

தமிழகத்தில் 91 சதவீத மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் குறைப்பதற்கு முன்னரே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தோம். கொரோனா கால நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கியது திமுக அரசு. இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. கோவிட்டில் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறோம். மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பு வாய்ந்த திட்டமும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில், 133 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ரூ.64 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். பெண் கல்விக்கு எதிரான அனைத்து தடைகளையும் தகர்த்தெறிவோம். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். பெரியகுளம், உத்தமபாளையம் மருத்துவமனைகள், குமளி பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்.

கடிகாரம் ஓடும் முன் ஓடு என்ற பாரதிதாசன் பாடலுக்கு ஏற்ப நான் உழைத்து வருகிறேன். அவதூறு செய்யும் உள்நோக்கத்தில் செய்யப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. நல்லது செய்வதற்கு நேரம் கிடைக்கவில்லை. கெட்டது பற்றி நினைக்க நேரமில்லை. எம்ஜிஆரிடம் இருந்த அரசியல் நாகரீகம் தற்போது உள்ளவர்களிடம் இல்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

டவரில் ஏறிய தொண்டரால் பரபரப்பு

தேனியில் நடந்த அரசு விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கையில் வத்தலக்குண்டு கட்டகாமன்பட்டி என்ற கிராமத்தில் ஒரு சம்பவம் நடந்தது. தொண்டர் ஒருவர் முதல்வரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் அலைபேசி கோபுரத்தின் மீது ஏறினார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை சமரசம் செய்து இறங்குமாறு கேட்டனர்.

தலைப்புச்செய்திகள்