Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா நான்காவது அலை: மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்

மே 02, 2022 10:56

புனே: நாட்டின் சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா வைரசால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதை நான்காம் அலையின் துவக்கமாக கருத முடியாது,” என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூடுதல் பொது இயக்குனர் டாக்டர் சமிரன் பண்டா தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, நான்காவது அலைக்கு வழிவகுத்துவிடுமோ என அஞ்சப்படுகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூடுதல் பொது இயக்குனர் டாக்டர் சமிரன் பண்டா நேற்று கூறியதாவது:சில மாநிலங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது. குறைந்த அளவில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உதாரணத்திற்கு டில்லியில் பாதிப்பு விகிதம் 7 சதவீதமாக முதலில் இருந்தது. எனினும் அறிகுறிகள் தென்படும் மக்களுக்கு பரிசோதனை செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு விகிதம் 5 சதவீதமாக குறைந்தது.

எனவே அனைத்து மாநிலங்களிலும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டியது அவசியம். இதேபோல், சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே வைரஸ் பரவுவது இதில் தெரிகிறது. நாடு முழுதும் ஒரே வேகத்தில் வைரஸ் பரவினால் தான், அதை புதிய அலை எனக் கூற முடியும். எனவே, இதை நான்காம் அலையின் துவக்கமாக கருத முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்