Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

மே 02, 2022 11:25

ராணிப்பேட்டை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை அடுத்த காரை புதுத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது62) இவர் அப்பகுதியில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருந்தார். இவரது மனைவி குணசுந்தரி(50) இவரது மகன்கள் விக்னேஷ், ரமேஷ்.

இதில் விக்னேஷ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ரமேசுக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவி ஒரு குழந்தை உள்ளது.

ரமேசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் பாகாயம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.ரமேஷ் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் ரமேஷின் மனைவி காயத்ரி குழந்தையுடன் கண்ணமங்கலத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டதால் ரமேஷ் விரக்தியுடன் இருந்து வந்தார்.

இது சம்பந்தமாக இன்று அதிகாலை ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனையடைந்த ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனின் பிணத்தை பார்த்து தந்தை பன்னீர்செல்வமும், தாய் குணசுந்தரியும் கதறி அழுதனர். மகனை இழந்த துக்கம் தாங்காமல் அவர்கள் 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இன்று வீட்டிற்கு வந்த உறவினர்கள் 3 பேரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் காந்தி சம்பவ இடத்திற்கு வந்து 3 பேர் உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தி அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதைத் தொடர்ந்து போலீசார் 3 பேர் உடல்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்