Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூட்டுறவு கடைகளில் விற்பனையாளர் பணி தேர்வு முடிவு: வெளியிட ஐகோர்ட் உத்தரவு

மே 03, 2022 02:07

சென்னை: விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு கடைகளில், 236 விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், 2020 ஜூனில் அறிவிப்பு வெளியிட்டார். நேர்முகத் தேர்வு, டிசம்பரில் முடிந்தது; ஆனால், முடிவுகளை வெளியிடவில்லை. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், தேர்வில் பங்கேற்ற எட்டு பேர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது, விளம்பர அறிவிப்பை வாபஸ் பெறப் போவதாக, அரசு தரப்பில் தெரிவித்ததை தொடர்ந்து, மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, எட்டு பேரும் மேல்முறையீடு செய்தனர்.மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.மாலா அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.விஜயபாண்டியன், புவனேஸ்வரன் ஆஜராகினர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:  காலியிடங்களை நிரப்ப, விளம்பரம் வெளியிடப்பட்டதில் சட்டவிரோதம் இல்லை. அதுகுறித்த கொள்கை முடிவில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது. ஆனால், அத்தகைய கொள்கை முடிவு தன்னிச்சையானதாக இருக்க முடியாது.கூட்டுறவு சங்க சட்டம் மற்றும் விதிகளின்படி, தேர்வு நடவடிக்கைகள் பூர்த்தியான நிலையில், விளம்பர அறிவிப்பை வாபஸ் பெறுவதை அனுமதிக்க முடியாது.

காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், மீதி இடங்களை நிரப்ப புதிதாக விளம்பரம் வெளியிட தடை ஏதும் இல்லை.விளம்பர அறிவிப்பை வாபஸ் பெற்றதால், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், தற்போது வயது வரம்பை தாண்டியிருப்பர்; அவர்கள் பாதிக்கப்படுவர்.எனவே, 2020 ஜூன் 19ல் வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்பை தொடர்ந்து, நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் முடிவுகளை வெளியிட வேண்டும்.
இந்த நடவடிக்கையை இரண்டு மாதங்களில் பூர்த்தி செய்ய வேண்டும். காலியிடங்களில் மற்றவர்களை நியமிப்பதற்கு முன், எட்டு தேர்வர்களுக்கான முடிவுகளை வெளியிட்டு, இடஒதுக்கீட்டை பின்பற்றி நியமிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்