Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4 மாநிலங்களுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு கோதுமை ஒதுக்கீடு செய்யப்படாது

மே 04, 2022 12:24

சென்னை : பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு கோதுமை ஒதுக்கீடு செய்யப்படாது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 11 மாநிலங்களுக்கு வருகின்ற செப்டம்பர் மாதம் வரையிலான கோதுமை ஒதுக்கீட்டை உணவு அமைச்சகம் நேற்று திருத்தியுள்ளது. திருத்தப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் அடுத்த 5 மாதங்களுக்கு தமிழ்நாடு, கேரளா, பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து கோதுமை கிடைக்காது. இருப்பினும் உணவு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க இந்த 4 மாநிலங்களுக்கும், மத்திய தொகுப்பில் இருந்து அரிசி மட்டும் விநியோகிக்கப்படும்.

டெல்லி, குஜராத், மராட்டியம், மேற்கு வங்கம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு கணிசமான அளவு கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டு அரிசி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அளித்து இருக்கும் தகவலில், பற்றாக்குறையை போன்ற சூழ்நிலையை தடுக்கவும் இருப்பு விதிமுறைகளின் படி போதுமான தானிய இருப்பை உறுதி செய்யவும் மாநிலங்களுக்கான அரிசி, கோதுமைக்கான ஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தீவிரமாக பரவிய போது, தொடங்கப்பட்ட கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் சமீபத்தில் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 80 கோடி பயனாளிகளுக்கு மாதம் தோறும் 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தான் தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு செப்டம்பர் மாதம் வரை கோதுமை கிடையாது என்று ஒன்றிய அரசு கைவிரித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்