Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்ட தூய்மைப் பணியாளர்

மே 05, 2022 06:42

புதுச்சேரி: குப்பைத் தொட்டி அருகே கிடந்த பிறந்து ஒரு நாளேயான பச்சிளம் குழந்தையை தூய்மைப் பணியாளர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், குழந்தையின் பெற்றோர் குறித்து புதுச்சேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அரியூர்பேட் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மங்காவரம் (50). இவர் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி நகராட்சி பகுதியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். மங்காவரம் லப்போர்த் வீதி - சின்னசுப்புராயப்பிள்ளை வீதி சந்திப்பில் அவர் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள குப்பை தொட்டியை சுத்தம் செய்ய சென்றபோது, அதன் அருகில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் துணியில் சுற்றப்பட்ட நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், அந்தக் குழந்தையை தானே வளர்க்க ஆசைப்பட்டு தனது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், அந்த குழந்தையின் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் இருந்ததால், குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையின் பெற்றோர் குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் விசாரித்தபோது, மங்காவரம் நடந்த விவரத்தை எடுத்து கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் மங்காவரத்துக்கு அறிவுரை கூறி அந்தக் குழந்தையை சிகிச்சைகாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் மங்காவரம் இந்தச் சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டி அருகே வைத்துவிட்டுச் சென்றது யார், அந்தக் குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்