Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா தொற்று முடிவடைந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் :அமித் ஷா

மே 06, 2022 10:51

சிலிகுரி:  மேற்கு வங்கத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிலிகுரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாது என திரிணமூல் காங்கிரஸ் கட்சி வதந்தி பரப்பி வருகிறது. கரோனா தொற்று முடிவடைந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும். ஊடுருவல் தொடர்வதை மம்தா பானர்ஜி விரும்புகிறாரா? ஆனால் சிஏஏ நிச்சயம் அமல்படுத்தப்படும். இதை திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் தடுக்க முடியாது. இவ்வாறு அமித் ஷா பேசினார். முன்னதாக, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், ஹிங்கால்கன்ஜ் என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படையின் ரோந்துப் படகுகள், படகு ஆம்புலன்ஸ் ஆகியவற்றை நேற்று தொடங்கி வைத்தார். இந்த ரோந்துப் படகுகள் சுந்தர்பன்ஸ் பகுதியில் மிதக்கும் பாதுகாப்பு நிலைகளாக செயல்படும்.

இந்நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீர்ரகளிடம் பேசிய அமித் ஷா, “எல்லைப் பகுதியில் புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள ரோந்துப் படகுகள், ஊடுருவல், கடத்தலை தடுத்து நிறுத்த உதவும். எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பையும் இந்த ரோந்துப் படகுகள் வழங்கும். சுந்தரவனப் பகுதியில் எளிதில் செல்ல முடியாத பகுதியில் கண்காணிப்பை இந்த ரோந்துப் படகுகள் தீவிரப்படுத்தும். சுந்தரவனப் பகுதியில் சாகேப் காலி முதல் சாம்ஷேர் நகர் வரை தனித்தனியாக உள்ள பகுதிகளில் ஆம்புலன்ஸ் படகு, மருத்துவ உதவிகளை அளிக்கும்” என்றார்.

ஹரிதாஸ்பூரில் மைத்ரி சங்ரஹாலயா அருங்காட்சியகத்துக்கும் அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். இந்த அருங்காட்சியகம், கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்த போது எல்லை பாதுகாப்புப் படையினரின் வீரதீர செயல்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். கூச் பெகார் மாவட்டத்தில் உள்ள, ஜிகாபாரி என்ற எல்லைச்சாவடியில், எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுடன் அவர் இன்று கலந்துரையாடுகிறார். அதன்பின் கொல்கத்தாவில், மேற்குவங்க பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசுகிறார். யுனெஸ்கோ கலாச்சார பாரம்பரிய பட்டியலில் துர்கா பூஜையை சேர்க்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவின் விக்டோரியா அரங்கில் கலாச்சாரத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியிலும் அமித்ஷா இன்று பங்கேற்கிறார்.

தலைப்புச்செய்திகள்