Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஷவர்மா உணவகங்களில் அதிரடி ஆய்வு

மே 06, 2022 05:56

திருப்பூர்: திருப்பூரில் ஷவர்மா விற்பனை செய்யப்படும் உணவுகங்களில் திடீரென அதிரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கெட்டுபோன 4.5 கிலோ கோழி இறைச்சியை கைப்பற்றி அழித்துள்ளனர். கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில் நாடு முழுவதும் அந்த உணவு தொடர்பான அச்சம், பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் ஷவர்மா உணவு சமைப்பது தொடர்பாக அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட உணவு பாதுகப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் அசைவ உணவகங்களில் தயாரிக்கப்படும் ஷவர்மா உணவுப்பொருள் விற்பனை குறித்து ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகள், பல்லடம், அவினாசி சாலைகள், பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள 50 உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 4½ கிலோ கெட்டுப்போன மற்றும் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஷவர்மா தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களான கோழி இறைச்சி, முட்டை, எண்ணெய், மாவு அனைத்தும் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும், தரமான பொருட்களாகவும் இருக்க வேண்டும். ஷவர்மா உள்ளே வைக்க பயன்படுத்தப்படும் கோழி இறைச்சி சரியான வெப்பநிலையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

கோழி இறைச்சி நன்றாக சமைக்கப்பட்ட பிறகே உணவுக்கு பயன்படுத்த வேண்டும். ஷவர்மா தயாரிக்கப்பட்ட பின்பு அதை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும் என்ற தெளிவுரை நுகர்வோர் அறியும் வகையில் தெரிவித்து விற்பனை செய்ய வேண்டும். ஷவர்மாவுக்கு பயன்படுத்தப்படும் மயோனைஸ் என்ற பொருள் நல்ல நிலையில் இருக்கும் முட்டையில் இருந்து தயாரிக்க வேண்டும். சரியான வெப்பநிலையில் சரியாக சமைக்கப்படாத உணவுப்பொருள் விரைவில் கெட்டுப்போகும். பாக்டீரியா உள்ளே சென்று உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். ஆய்வின் போது இதுபோன்று கண்டறியப்பட்டால் அந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைப்புச்செய்திகள்