Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம்

மே 07, 2022 12:29

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பி.அம்மாபட்டி கிராமத்தில் சடச்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற பிரியாணி திருவிழா 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இதற்கான விழா கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சுற்றுவட்டார கிராம மக்கள் காப்புகட்டி விரதத்தை தொடங்கினர். விழாவின் முக்கிய நிகழ்வான அசைவ பிரியாணி வழங்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது.

தேங்காய், பழம், பூ தட்டுகளுடன் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கோழி, ஆடு கிடாய் வெட்டப்பட்டது. அதில் இருந்து வெளியேறிய ரத்தம் கோவிலுக்குள் உள்ள சிறிய கிணற்றில் விடப்பட்டது. இந்த ரத்தத்தை அம்மன் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். தொடர்ந்து சாமிக்கு பலியிடப்பட்ட கோழி, கிடாய்கள் கறியாக வெட்டப்பட்டு 1500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி தயார் செய்யப்பட்டது.

சுடச்சுட கமகமக்கும் வாசனையில் தயாரிக்கப்பட்ட பிரியாணி நன்கொடை கொடுத்தவர்கள் வீடுகளுக்கு பிளாஸ்டிக் வாளிகளில் நிரப்பி நேரடியாக சென்று வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிராம மக்களுக்கும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கும் பிரியாணி ஆவி பறக்க பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் அதனை பாத்திரங்களில் வாங்கி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த 20 சமுதாய மக்கள் சுற்றுவட்டார கிராமங்களான பன்னிக்குண்டு, பொக்கம்பட்டி, தங்களாச்சேரி, சாத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பிரியாணியை பிரசாதமாக பெற்றுச் சென்றனர்.

இந்த விழா குறித்து பக்தர்கள் கூறுகையில், சடச்சி அம்மனை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களும் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கும் சக்தி வாய்ந்த அம்மனாக சடச்சியம்மன் அருள்பாலிக்கிறார். இதனால் பக்தர்கள் தங்கள் வேண்டியது நிறைவேறியதற்கு கிடாய்களை கோவிலுக்கு தானமாக கொடுப்பார்கள். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த திருவிழா வெகு விமரிசையாக அனைத்து ஜாதியினரும் ஒற்றுமையுடன் கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்