Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவமனையில் சாந்தனுக்கு மருத்துவப் பரிசோதனை

மே 09, 2022 03:22

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தனை மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்து வந்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையிலும், நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் மத்திய சிறையிலும், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையிலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாந்தன் மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனையில் அவருக்கு எந்த விதமான உடல்நல பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு காவல்துறை டிஎஸ்பி தலைமையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சாந்தன், 30 நிமிட பரிசோதனைகளுக்குப் பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆயுள் தண்டனை கைதிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் வழக்கமான சோதனைதான் இது என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பேரறிவாளன் வழக்கு: தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரறிவானுக்கு 30 ஆண்டுகளில் முதல்முறையாக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில், மத்திய அரசு மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என்றால், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று உத்தரவிட்டிருந்தது. மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எடுத்த முடிவு தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் நாளை (மே 10) விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்