Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டை கண்காணிக்கும் ஆகாய கண் ரேடார் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது: இஸ்ரோ

மே 08, 2019 05:17

சென்னை: நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இஸ்ரோ தயாரித்துள்ள ரேடார் செயற்கைகோள் வருகிற 22-ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

ரேடார் செயற்கைகோள்

கண்காணிப்பு, வானிலை ஆய்வு, விமானம்-கப்பல் மற்றும் வாகனங்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிரத்யேகமான செயற்கைகோள்களை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் நாட்டின் கண்காணிப்பு பணிகளுக்காக புதிய ரேடார் செயற்கைகோள் தற்போது தயாரிக்கப்பட்டு உள்ளது.


‘ரீசாட்-2பிஆர்1’ எனப்படும் இந்த ‘ரேடார் இமேஜிங் சேட்டிலைட்’ செயற்கைகோள் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அவை முடிந்தவுடன் வருகிற 22-ந் தேதி இந்த செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் இஸ்ரோ இறங்கி உள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

வானிலை முன்னறிவிப்பு

பூமி கண்காணிப்பு பணிக்காக கடந்த 2012-ம் ஆண்டு ‘ரீசாட்-1’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதன் மூலம் இயற்கை வள மேலாண்மை, வேளாண் திட்டமிடல், வன கணக்கெடுப்புகள், பேரழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கான தரவுகள் பெறப்பட்டன.

‘ரீசாட்’ செயற்கைகோள்கள் தொலை உணர்வு செயற்கைகோள் வகையை சேர்ந்தவையாகும். செயற்கைத்துளை ரேடார்களை பயன்படுத்தி அனைத்து வானிலை முன்னறிவிப்புகளையும் இது வழங்கி வருகிறது. அத்துடன் நம் நாட்டின் எல்லைப்பகுதியில் ஊடுருவலை கண்டறிவதற்கும், பாதுகாப்பு துறைக்கு பகல் மற்றும் இரவு நேரங்களிலும் தரவுகளை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப் படுகிறது.

‘ஆகாய கண்’

இந்த வரிசையில் ரேடார் செயல்பாடுகளை பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோள் வருகிற 22-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்த செயற்கைகோள் இந்தியாவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும். வானில் இருந்தப்படி இந்தியாவை கண்காணித்து கொண்டே இருப்பதால், இதனை ‘ஆகாயத்தில் இருந்து நம் நாட்டை கண்காணிக்கும் கண்’ என்று அழைக்கிறோம்.

கப்பல்களின் நடமாட்டம்

இந்த செயற்கைகோள் நம் நாட்டின் எல்லைப் பகுதியை கண்காணிப்பதற்காக இந்திய பாதுகாப்பு படைகளுக்கு உதவும் வகையில் செயல்பட உள்ளது. அத்துடன் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடலில் எதிரி கப்பல்களின் நடமாட்டம் குறித்தும் கண்காணிக்கும்.

‘ரீசாட்2பிஆர்’ வகை செயற்கைகோள்களை விட இந்த செயற்கைகோள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம் படுத்தப்பட்டது. கண்காணிப்பு மற்றும் துல்லியமான படங்களை எடுக்கும் அதிக திறன் கொண்டவையாகும். அதுவும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பூமியில் ஏதேனும் ஒரு இடத்தில் உள்ள பொருளை துல்லியமாக படம் எடுக்க முடியும் என  விஞ்ஞானிகள் கூறினார்கள்.

தலைப்புச்செய்திகள்