Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்வு

மே 16, 2022 02:13

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில், குளச்சல், சுருளோடு, புத்தன் அணை, கன்னிமார், பூதப்பாண்டி, அடையாமடை, ஆணை கிடங்கு, குருந்தன்கோடு, கோழிப்போர்விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது.

புத்தன்அணையில் அதிகபட்சமாக 24 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து நேற்றைவிட இன்று இரு மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.45 அடியாக இருந்தது.

அணைக்கு 806 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியதையடுத்து குழித்துறை மற்றும் கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திற்பரப்பு, குழித்துறை, தேங்காய்ப்பட்டினம், களியல் பகுதியில் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள். அணை நீர்மட்டத்தையும் அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

பேச்சிப்பாறை அணை கன்னிப்பூ சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும். ஆனால் தற்போது அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டி வருவதையடுத்து முன்கூட்டியே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தக்குளியலிட்டு வருகிறார்கள். 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.75 அடியாக உள்ளது.

அணைக்கு 323 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 16.65 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17.90 அடி ஆகவும், சிற்றாறு1 அணை நீர்மட்டம் 10.23 அடியாகவும், சிற்றாறு2 அணை நீர்மட்டம் 10.33 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 4.20 அடியாக உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்