Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு செய்தார் பிரதமர்

மே 16, 2022 03:21

காத்மாண்டு: புத்த ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று நேபாளம் சென்றுள்ளார். இந்த நிலையில் நேபாளம் லும்பினி சென்றடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார். இதனைத்தொடர்ந்து லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் அமைந்துள்ள மாயதேவி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பிரதமர் ஆன பிறகு அவர் நேபாளத்துக்கு செல்வது இது 5-வது தடவை ஆகும். ஆனால், புத்தர் பிறந்த ஊரான லும்பினிக்கு முதல் முறையாக சென்றுள்ளார். 

பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபாவும், அவரது மனைவி அர்சு ராணா தூபாவும் சென்றிருந்தனர். கோவில் வளாகத்தின் உட்பகுதியில் உள்ள குறியீட்டுக் கல்லுக்கு இருநாட்டு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். இது பகவான் புத்தரின் மிகச்சரியான பிறப்பிடம் என்பதைச் சுட்டிக்காட்டுவதாகும்.  புத்த சமய முறைகளின்படி நடைபெற்ற பூஜையில் அவர்கள் பங்கேற்றனர். ஆலயத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள அசோகர் ஸ்தூபி அருகே இரு பிரதமர்களும் விளக்குகள் ஏற்றி வைத்தனர். இந்தத் தூண் கி.மு. 249-ல் அசோக சக்கரவர்த்தியால் நிறுவப்பட்டது. பகவான் புத்தரின் பிறப்பிடம் என்பதற்கான முதல் கல்வெட்டு ஆதாரமாக லும்பினியில் இது உள்ளது. 

இதன்பிறகு புத்தகயாவில் இருந்து கொண்டுவரப்பட்டு 2014-ல் லும்பினிக்குப் பிரதமர் மோடியால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட போதி மரக்கன்றுக்கு இரு பிரதமர்களும் நீர் வார்த்தனர். ஆலயத்தின் வருகையாளர் பதிவேட்டிலும் கையெழுத்திட்டனர்.  மாயதேவி கோவில் தரிசனத்துக்கு பிறகு அருகே உள்ள புத்த துறவிகள் மடத்துக்கு பிரதமர் மோடி சென்றார். புத்த கலாசார பாரம்பரிய மையம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் ஷெர்பகதுர் துபாவும் நீர்மின்சாரம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

தலைப்புச்செய்திகள்