Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மே 16, 2022 03:28

சென்னை: பா.ம.க. இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது உறுதியாகி விட்ட நிலையில், உழவர்கள் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளனர். ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் பாசனக் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவது உழவர்களை கவலையடையச் செய்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அடுத்த சில நாட்களில் காவிரி கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடைவதை உறுதி செய்வதில் தான் குறுவை சாகுபடியின் வெற்றி அடங்கியிருக்கிறது. அதற்காக கடைமடை பாசன பகுதிகள் வரை தூர்வாரப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாகவும் பாசனக் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதே வேகத்தில் சென்றால் மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக பாசனக் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரி முடிக்கப்பட வாய்ப்பில்லை. கடந்த சில ஆண்டுகளாக பாசனக் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால், பாசனக் கால்வாய்களின் மட்டம் ஆற்றின் மட்டத்தை விட அதிகரித்து, அவற்றில் தண்ணீர் பாய்வது தடைபட்டது. அதனால் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தாமதமாகவே தண்ணீர் சென்றது. இந்த முறையும் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்