Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

256 நடமாடும் மருத்துவ சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

மே 17, 2022 01:12

சென்னை: ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில், தொலைதூரத்தில் உள்ள கிராமங்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் ஆம்புலன்சில் சென்று அங்கேயே மக்களிடம் நோய்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கும் திட்டம் 2007ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சட்டசபையில் நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கையின்போது தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த புதிதாக 389 எண்ணிக்கையில் நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் ரூ. 70 கோடி மதிப்பில் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டார். அதன் அடிப்படையில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தலா ரூ.18 லட்சம் செலவில் 389 நடமாடும் மருத்துவ வாகனத்துக்கு ரூ.70.02 கோடி நிதி தேசிய நலவாழ்வு குழுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மூலம் புதிதாக வாங்கப்பட்ட 389 வாகனங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு அதன் சேவையை தொடங்கி வைக்கும் அடையாளமாக கடந்த மாதம் (ஏப்ரல்) சென்னை மெரினாவில் 133 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் மருத்துவ வாகனத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார உதவியாளர் மற்றும் ஓட்டுனர் ஆகியோர் இடம் பெற்று கிராமங்களுக்கு சென்று சேவையாற்றி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம் மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 389 வாகனங்களில் முதல்கட்டமாக 133 வாகனங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதால் 2வது கட்டமாக 256 மருத்து சேவை வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலையில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று மருத்துவ சேவை வாகனங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்