Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்மா மினி கிளினிக் மீண்டும் செயல்படுத்த வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

மே 17, 2022 02:50

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பூலாம்பாடி காலனி கிராமத்தில் வசித்து வரும் கார்த்திக் கடந்த 7-ந்தேதி காலை தனது 5 வயது பெண் குழந்தை லட்சிதாவை வேப்பூரில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு குழந்தைகள் நல மருத்துவர் என்றழைக்கப்படும் சத்தியசீலன் சிகிச்சை அளித்ததாகவும், சிகிச்சைக்குப்பின் அந்தப் பெண் குழந்தை லட்சிதா உயிரிழந்துவிட்டதாகவும், செய்திகள் வந்துள்ளன.

நல்லூர் வட்டார அரசு தலைமை மருத்துவர் தமிழரசன் தலைமையில் ஒரு குழு, குழந்தை லட்சிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சத்தியசீலனிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது, சத்தியசீலன் ஒரு போலி மருத்துவர் என்பது தெரிய வருகிறது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற சாதாரண நோய் வந்தால் அருகில் உள்ள தனியார் மருத்துவர்களிடம் சென்று, பணம் செலவு செய்து மருத்துவ சிகிச்சை பெற முடியாத ஏழை, எளிய, நடுத்தர மக்கள், அவர்களின் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், முதற்கட்டமாக 2000 அம்மா மினி கிளினிக்குகளை தமிழகமெங்கும் அம்மாவின் அரசு தொடங்கியது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் இந்த அரசு, அம்மா மினி கிளினிக் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியது.

இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீண்டும் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பூலாம்பாடி காலனியில் வசிக்கும் கார்த்திக்கும் தனது 5 வயது குழந்தை லட்சிதாவை, கட்டணம் குறைவு என்ற காரணத்தினால் போலி மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று தனது குழந்தையை இழந்துள்ளார். இதுபோல் இன்னும் எத்தனை பேர் சிகிச்சைக்கு பணம் இல்லாத சூழ்நிலையில், குறைவான கட்டணத்தில் இது போன்ற போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று உடல் நலத்தை மேலும் கெடுத்துக் கொள்கின்றனரோ, உயிரையும் இழக்கும் சூழ்நிலைக்கு உள்ளாகின்றனரோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.

நகர்புறங்களில் நிறைய மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், கிராமப்புறங்களில் தான் ஏழை, எளிய மக்கள் சாதாரண காய்ச்சல், சளி போன்ற உபாதைகளுக்குக்கூட அருகில் உள்ள நகர்புறங்களுக்குச் செல்ல வேண்டும். எனவே, அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட வேண்டும். உயிரிழந்த பெண் குழந்தை லட்சிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்