Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசத்துரோக சட்டப்பிரிவுமறு ஆய்வு

மே 17, 2022 03:08

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தேசத் துரோக வழக்குப் பதிவு செய்வதற்காக, இந்திய தண்டனை சட்டத்தில், ௧௨௪ ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் சந்தித்துள்ளனர்.
அதேநேரத்தில், நாடு விடுதலையான பின், மத்திய - மாநில அரசுகளை விமர்சிப்பவர்கள், பேச்சு சுதந்திரம் என்ற ரீதியில் அத்துமீறி பேசுபவர்கள், அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், பொது விஷயங்களுக்காக போராடும் சமூக ஆர்வலர்கள் போன்றோருக்கு எதிராக, தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், தேசத் துரோக வழக்கு தொடர்பான சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், இந்தச் சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தேசத்துரோக சட்டப்பிரிவை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்யலாம். அதுவரை அச்சட்டப்பிரிவு நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன் கீழ், எந்த ஒரு புதிய வழக்கையும், மத்திய - மாநில அரசுகள் பதிவு செய்யக்கூடாது' என தெரிவித்துள்ளது. இந்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, '1962ம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, தேசத் துரோகச் சட்டப்பிரிவு செல்லும் என உறுதி செய்துள்ளது. 'அதனால், தடாலடியாக அதை ரத்து செய்வது சரியாக இருக்காது. அதேநேரத்தில், இதை மறுபரிசீலனை செய்ய, அரசு தயாராக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

மத்திய அரசின் இந்த அணுகுமுறை வரவேற்கத்தக்கதே. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பதவியேற்ற பின், கடந்த எட்டு ஆண்டுகளில், காலத்திற்கு ஒவ்வாத, 1,500க்கும் மேற்பட்ட சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தச் சட்டப்பிரிவு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளால், இதுபற்றி பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு ஆளாகியுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில், மகாத்மா காந்தி, பாலகங்காதார திலகர் போன்றவர்களை அடக்கி வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டப்பிரிவு, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகும் நிலையிலும் நீடித்திருப்பது வியப்பு அளிப்பதாக உள்ளது. இது தொடர்பாக, முந்தைய காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தச் சட்டப்பிரிவின் கீழ் இதுவரை தொடரப்பட்ட வழக்குகளில், தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அடக்குவதற்காகவும், அவர்களை மிரட்டவும், இந்தச் சட்டப் பிரிவை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது நிரூபணமாகிறது. பா.ஜ., - காங்கிரஸ் உட்பட, பல கட்சிகளும், இந்தச் சட்டப்பிரிவின் கீழ், பலர் மீது வழக்கு தொடர்ந்துள்ளன என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

சமீபத்தில், பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, 'நீதிமன்றங்களின் தீர்ப்புகளை அரசுகள் பல ஆண்டு களாக செயல்படுத்தாத நிலை உள்ளது. 'இதன் விளைவாக, அவமதிப்பு வழக்குகள் அதிக அளவில் தாக்கலாகி, நீதிமன்றங்களுக்கு சுமையை ஏற்படுத்துகின்றன. நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்த பிறகும், அரசுகள் வேண்டுமென்றே அவற்றை அமல்படுத்தாமல் இருப்பது, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல' என்று கூறினார்.

அதனால், காலத்திற்கு ஒவ்வாத, அரசியல் எதிரிகளை, ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை பழிவாங்க பயன்படுத்தப்படும் சட்டப்பிரிவுகளை, மத்திய அரசு ரத்து செய்தாலே, நீதிமன்றங்களில் வழக்குகளில் எண்ணிக்கை குறையும். தற்போது பயங்கரவாதிகளை ஒடுக்கவும், நாட்டுக்கு எதிராக சதி செய்வோரை கைது செய்யவும், வேறு சில கடுமையான சட்டப்பிரிவுகள் இருக்கையில், அரசியல் எதிரிகளை மிரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இது போன்ற சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்வது அல்லது மறுபரிசீலனை செய்வது தான் சரியாக இருக்கும். அப்படி செய்வதன் வாயிலாக, நம் நாட்டின் கவுரவமும் மேம்படும். அதனால், ஏற்கனவே பல சட்டப்பிரிவுகளை துாக்கி எறிந்த, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, விரைவில் இந்தச் சட்ட விவகாரத்திலும் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்பலாம்.

தலைப்புச்செய்திகள்