Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு; மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மே 18, 2022 11:28

சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் மே 26, 27-ம் தேதிகளில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகியவை அறிவித்துள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல் - லிபரேஷன்) ஆகிய கட்சிகள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவிலை கடந்த ஓராண்டில் மட்டும் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. காய்கறி, தானியங்கள், உணவு எண்ணெய் என அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நிலக்கரி பற்றாக்குறைக்கு வழிவகுத்த மத்திய அரசின்கொள்கைகளால் தற்போது மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமான மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மே 25 முதல் 31-ம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு நாடு தழுவிய இயக்கம் நடத்த வேண்டும் என இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்- லிபரேஷன்) சார்பில், மே 26, 27-ம்தேதிகளில் ஒன்றிய, நகர, வட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும், மே 25 முதல் 31-ம் தேதிவரை வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் செய்யவும் நேற்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ‘பெட்ரோல், டீசல், காஸ் மீதான வரிகளை கைவிட்டு, விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாயவிலைக் கடையில் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்.

தலைப்புச்செய்திகள்