Sunday, 6th October 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 ஆண்டுகளில் மின் உற்பத்தியை 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை

மே 18, 2022 12:25

கரூர்: தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தியை 25 சதவீதத்திலிருந்து அடுத்த 5 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் ரூ.6.78 கோடியில் புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (மே 18ம் தேதி) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு புனரமைப்பு பணியை மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: "கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் கடந்த 1945, 1947ம் ஆண்டு காலக் கட்டத்தில் கட்டப்பட்டது. தற்போது ரூ.6.78 கோடியில் புனரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் காய்கறி, பழம், கறிக்கடைகள் உள்ளிட்ட 174 கடைகள் கட்டப்படும். ஏற்கனவே இங்கு கடைகள் வைத்திருப்பவர்களுக்கு இதில் கடைகள் வழங்கப்படும். பணிகள் ஒன்றரை ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இங்கு கடைகள் வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் ஆறு-ஏழு நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. காற்றாலை மின்சாரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக பாமக தெரிவித்துள்ளது. 2 நாட்கள் மழை காரணமாக மின் நுகர்வு குறைந்தது. அனல் மின்சாரத்துடன் 60 சதவீத காற்றாலை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. சமமான மின் விநியோகத்திற்காகவே அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உபரி மின்சாரத்தை விற்பனைக்காக எந்தெந்த மாநிலங்களுக்கு மின்சாரம் தேவை எனக் கேட்கப்பட்டுள்ளது. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொழிற்சாலைகளுக்கான மின்சார தேவை காரணமாக மின்வெட்டு, மின்தடை உள்ளது. தமிழகத்தில் அத்தகைய நிலை இல்லை. காற்றாலை, சூரிய மின்சக்தி ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்தி வருகிறோம். 6,200 மெகாவாட் மின்சாரம் சொந்தமாக உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக மின் தேவையில் 25 சதவீதம் மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த 5 ஆண்டு களில் இதனை 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 10 ஆண் டுகளில் சொந்த உற்பத்தியை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளோம்.

முந்தைய ஆட்சியில் சேதமடைந்த மின்மாற்றிகள் மட்டுமே மாற்றப்பட்டு வந்தன. ஒரே நேரத்தில் 24,000 மின் மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன. கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். 4.5 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்புக்கு காத்திருந்த நிலையில் 6 மாதங்களில் 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் அரவக்குறிச்சி இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பொறியாளர் நக்கீரன், சுகாதார அலுவலர் லட்சியவர்ணா, கரூர் மாவட்ட வர்த்தகர் சங்க தலைவர் வழக்கறிஞர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்