Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலங்கை எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவு

மே 18, 2022 03:38

கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த, பார்லிமென்ட் நேற்று அனுமதிக்கவில்லை.நம் அண்டை நாடான இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை அடுத்து, இடைக்கால பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார் மகிந்தவின் சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபரை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை பார்லி.,யில் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன.இந்த பதவி நீக்க தீர்மானத்தின் மீதான விவாதத்தை 17ல் நடத்த, சமீபத்தில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்ற பின், இலங்கை பார்லிமென்ட் நேற்று முதல்முறையாக கூடியது. அப்போது, பார்லி., அலுவல்களை ரத்து செய்துவிட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்க கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு, தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர் சுமந்திரன் கோரிக்கை விடுத்தார். அலுவல்களை ரத்து செய்ய அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, விவாதம் நடத்தலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க ஓட்டெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார்.இதையடுத்து நடந்த ஓட்டெடுப்பில், பதவி நீக்க தீர்மானம் மீதான விவாதம் நடத்துவதற்கு எதிராக 119 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். தீர்மானத்துக்கு ஆதர வாக 68 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். இதையடுத்து தீர்மானம் தோல்வியடைந்தது. பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளித்ததாக, பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார்.அதிபரின் பதவி நீக்கம் தொடர்பான தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை மறுநாள் நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

இந்நிலையில், இலங்கை பார்லிமென்ட் துணை சபாநாயகருக்கு நேற்று நடந்த ஓட்டெடுப்பில், இலங்கை பொதுஜன பெருமுன கட்சியின் அஜித் ராஜபக்சே வெற்றி பெற்றார். இதற்கிடையே, இலங்கையில் சமீபத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.பி.,க்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

தலைப்புச்செய்திகள்