Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தலைமை நீதிபதி பதவி விலக வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டு முன்பு பெண்கள் போராட்டம்

மே 08, 2019 05:45

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, அவரது வீட்டில் உதவியாளராக வேலை செய்த பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இதனை தலைமை நீதிபதி மறுத்தார். இந்த புகார் பற்றி விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு ஆளான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அவர் மீது குற்றம் சுமத்திய பெண் உதவியாளர் ஆகிய இருவரும் மூவர் குழு முன் விசாரணைக்கு தனித்தனியாக ஆஜரானார்கள்.

விசாரணைக்கு பிறகு, தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை 3 நீதிபதிகள் குழு தள்ளுபடி செய்தது.

இந்த நடவடிக்கைக்கு பெண்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தலைமை நீதிபதி மீது வெளிப்படையான விசாரணை நடத்த கோரியும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட்டு பெண் வக்கீல்கள் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெண்கள் அமைப்பினர் நேற்று சுப்ரீம் கோர்ட்டு முன்பு ஒன்றுகூடி போராட்டம் நடத்தினார்கள். அப்போது தலைமை நீதிபதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சுப்ரீம் கோர்ட்டு அமைந்துள்ள இடம், மிக மிக முக்கிய பிரமுகர்கள் பகுதி என்பதால், ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அங்கு போராட்டம் நடத்த தடை உள்ளது. எனவே, போலீசார் விரைந்து வந்து, 52 பெண்கள் உள்பட போராட்டக்காரர்கள் 55 பேரை வாகனத்தில் ஏற்றினர்.

55 பேரும் மந்திர் மார்க் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களைப் பற்றிய விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்