Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கருணாநிதி சிலை வைக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மே 19, 2022 02:10

சென்னை: திருவண்ணாமலை அருகே கருணாநிதி சிலை வைக்கும் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனு: திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் கிராமத்தில், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. வேங்கிக்கால் சந்திப்பில், இந்த நிலம் உள்ளது. மாநில நெடுஞ்சாலையையும், கிரிவலம் பாதையையும் இணைக்கும் வகையில், இந்த சந்திப்பு உள்ளது. கிரிவலத்தின் போது, லட்சக்கணக்கில் பக்தர்கள் இங்கு வருவர். வாகனப் போக்குவரத்தும் அதிகமாக இருக்கும்.கடந்த ஜனவரியில், ராஜேந்திரன் நிலம் அருகில் 300 சதுர அடி இடம் ஆக்கிரமிக்கப்பட்டது. மாவட்ட தி.மு.க., செயலர் வேலு, இந்த ஆக்கிரமிப்பை செய்துள்ளார். மறைந்த கட்சி தலைவருக்கு சிலை வைக்க, வேலு மற்றும் அவரது மகன் குமரன் நிர்வாக அறங்காவலராக உள்ள கல்வி அறக்கட்டளை, 215 சதுர அடி இடத்தை கையகப்படுத்தி உள்ளது. 215 சதுர அடியில் சிலை வைக்க ஒதுக்கி உள்ளது. அருகில், 300 சதுர அடியை ஆக்கிரமித்து, துாண்கள் எழுப்பி உள்ளனர். இந்த சட்டவிரோத கட்டுமானத்தை தடுக்கவில்லை என்றால், அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். கிரிவலம் வரும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, சிலை வைக்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில், நேற்று, விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை அமையும் இடத்தில், ஆக்கிரமிப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கருணாநிதி சிலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், அமைச்சர் எ.வ.வேலு, ஜீவா கல்வி அறக்கட்டளை பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்