Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீர்நிலைகளில் வண்டல் மண் அள்ள அனுமதி

மே 19, 2022 02:11

உடுமலை : விவசாய நிலங்கள் வளமாக்கும் வகையிலும், நீர் நிலைகளை துார்வாரும் வகையிலும், உடுமலை தாலுகாவில், 9 குளம், குட்டைகளில், 30 ஆயிரத்து, 742 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும், நீர் நிலைகளை துார்வாரி கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும், திருப்பூர் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, நீர் நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண், மண் ஆகியவற்றை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மண் எடுக்கும் விவசாயிகளுக்கு வேளாண் நிலம், துார்வாரப்படும் குளம் அமைந்துள்ள அதே வருவாய் கிராமம் அல்லது அருகிலுள்ள கிராமத்திற்கு அருகில் அமைந்திருக்க வேண்டும்.விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நஞ்சை நிலமாக இருந்தால், இரு ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ஏக்கருக்கு, 75 கன மீட்டர் அல்லது 75 டிராக்டர் லோடு வழங்கப்படும்.புஞ்சை நிலமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு, 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடு வழங்கப்படும். நீர் நிலையின், கரையின் அடிப்பகுதியிலிருந்து, இரு மடங்கு தொலைவில், ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேல் எடுக்கக்கூடாது.

நீர் நிலைகளின் கரை, நீர் வழித்தடங்கள், மரங்கள், கலிங்குகள், மதகு உள்ளிட்ட எந்த கட்டுமானங்களை சேதப்படுத்தக்கூடாது, உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.உடுமலை தாலுகாவில், விருகல்பட்டியிலுள்ள, பழையூர் குட்டையில், 53.4 ஹெக்டர் பரப்பளவில், 1,620 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.அதே போல், வாகத்தொழுவு, ஜக்கமநாயக்கன்பாளையம் குட்டையில், 18.49 ஹெக்டர் பரப்பளவில், 1,527 கன மீட்டர், பொன்னேரி குட்டையில், 7.31 ஹெக்டர் பரப்பளவில், 604 கன மீட்டர், இலுப்பநகரம், ஆலாமரத்துார் குட்டை, 5.95 ஹெக்டர் பரப்பளவில், 491 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வடுகபாளையம், சுங்காரமுடக்கு குட்டை, 5.21 ஹெக்டர் பரப்பளவில், 430 கன மீட்டர், அந்தியூர் குட்டையில், 9.71 ஹெக்டர் பரப்பளவில், 802 கன மீட்டர், கணபதிபாளையம் கிராமத்தில், கரையான் குட்டையில், 8.25 ஹெக்டர் பரப்பளவில், 681 கன மீட்டரும், கருப்பராயன் கோவில் குளத்தில், 6.91 ஹெக்டர் பரப்பளவில், 571 கன மீட்டர் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.மேலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, சின்ன வாளவாடி, பெரிய குளத்தில், 472.320 ஹெக்டர் பரப்பளவில், 25 ஆயிரத்து, 620 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்