Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏரியில் கொட்டப்படும் குப்பையால் சுற்றுச்சூழல் பாதிப்பு

மே 20, 2022 12:38

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் தாழம்பூர் ஊராட்சியில் 76 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீரால் அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. தற்போது தாழம்பூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை இந்த ஏரியின் ஒருபகுதியில் கொட்டப்படுகிறது. மேலும், நுண் உரமாக்கல் மையம் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ பாலாஜி மற்றும் குடியிருப்போர் சங்கத்தினர் இந்த ஏரியில் குப்பை கொட்டுவதைத் தடுத்து, நுண் உரமாக்கல் மையம் அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினர். இதன்பேரில், நுண் உரமாக்கல் மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், குப்பை கொட்டுவதற்காக மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. குப்பை கொட்ட ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊராட்சியில் ஏராளமான அனாதின நிலங்கள் உள்ளதாகவும், அரசியல் பிரமுகர்களின் ஆதரவோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அவற்றை மீட்டு குப்பை கிடங்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வருவாய்த் துறை மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிலர் கூறும்போது, “தாழம்பூர் ஏரியில் குப்பை கொட்டப்படவில்லை. ஏரிக்கரையில் கொட்டப்படும் குப்பையை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், குப்பை கிடங்கு அமைக்க தேவையான நிலத்தைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக்கிரமிப்புகள் இருந்தால் நிச்சயம் அகற்றப்படும்” என்றனர்.

தலைப்புச்செய்திகள்