Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மே 22-ல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு: வைகோ அழைப்பு

மே 20, 2022 04:04

சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி பெசன்ட் நகர் கடற்கரையில் மே 22-ல் நடைபெற உள்ளதையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில், சிங்களப் பெருந்திரளாக பேரினவாதம் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை தாக்குதலில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்காக நீதி வேண்டி தமிழர்கள் நாம் 13 ஆண்டுகளாக பன்னாட்டுச் சமூகத்திடம் போராடி வருகின்றோம். இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம், மே பதினேழு இயக்கம் சென்னையில் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தி வருகிறது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆண்டுதோறும் தவறாது நான் கலந்துகொண்டு, கொல்லபட்ட பாலகன் பாலச்சந்திரன் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள், போராளிகள் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகிறேன். தற்போது மெரினா கடற்கரையில் நிகழ்வுகள் நடத்த நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால், இந்த ஆண்டிற்கான நினைவேந்தல் நிகழ்வினை நடத்திக்கொள்ள சென்னை பெசன்ட் நகர் கடற்கரையினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. எனவே, தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் வரும் மே 22 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதைப் போல, இந்தாண்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான இதில் கழகத் தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக குடும்பத்தினருடன் கலந்துகொள்ள வேண்டுமென அன்புடன் அழைக்கிறேன்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்