Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்கள் அவதி

மே 23, 2022 01:29

சென்னை: சென்னை அண்ணா சாலையில் போலீஸார் செயல்படுத்தியுள்ள போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அண்ணா சாலையில் ஜி.பி.ரோடு சந்திப்பு முதல் வாலாஜா சாலை சந்திப்பு வரை, அங்குள்ள ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் முன் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், போலீஸார் தற்போது செயல்படுத்தியுள்ள போக்குவரத்து மாற்றத்தால், போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை என்றும், வாகன ஓட்டிகள் முன்பைவிட அதிகம் சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது.

புதிய போக்குவரத்து மாற்றத்தின்படி, அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எல்ஐசி நிறுத்தத்தைக் கடந்ததும், அண்ணா சாலையில் தொடர்ந்து செல்ல அனுமதியில்லை. தாராப்பூர்டவர் எதிரே இடதுபுறமாக திரும்பி, டேம்ஸ் சாலை வழியாகச் சென்று, வலதுபுறம் திரும்பி பிளாக்கர்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையில் இணைய வேண்டும். அகலமான அண்ணா சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் டேம்ஸ் சாலை சென்று, குறுகலான பிளாக்கர்ஸ் சாலைக்குள் நுழைவது சிரமமாக உள்ளது. இதுதவிர, புதுப்பேட்டை பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் சேர்ந்து கொள்வதால், கேசினோ திரையரங்கம் எதிரே சாலையில் கடும் வாகன நெரிசல் நிலவுகிறது.

அதேபோல, வாலாஜா சாலை வழியாக வருவோர் நேரடியாக அண்ணா சிலை அருகே வலதுபுறம் திரும்பி சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கிச் செல்ல முடியாது. அண்ணா சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, அடுத்து சுமார் 50 மீட்டர் தூரத்திலேயே காதிம் ஷோரூம் எதிரில் ‘யு டர்ன்’ எடுத்து, சிம்சன் நோக்கிச் செல்ல வேண்டும். இந்த சூழலில் சிம்சன் வழியாக வருவோர் நேராக எல்ஐசி செல்வதிலும், வாலாஜா சாலைக்கு இடதுபுறம் திரும்புவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த இடத்தில் வாகனங்கள் அடிக்கடி மோதிக் கொள்கின்றன.

தேவி திரையரங்க வளாகத்தில் இருந்து புறப்படுவோர் எழும்பூர் அல்லது சென்ட்ரல் நோக்கிச் செல்ல வேண்டுமானால் அண்ணா சாலையை குறுக்காக கடந்தால்தான், எதிர்புறம் சென்று தாராப்பூர் டவர் அருகே திரும்ப முடியும். ஆனால், அண்ணா சாலையில் எந்நேரமும் வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருப்பதால், இந்த இடத்திலும் வாகன ஓட்டிகள் மோதிக் கொள்கின்றனர். இந்த போக்குவரத்து மாற்றத்தால், பாதசாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த போக்குவரத்து மாற்றத்தால் சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆனால், இந்த மாற்றங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாக் கூறி, கடந்த ஏப். 30-ம் தேதி முதல் இந்த மாற்றங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறியபோது, “இந்த போக்குவரத்து மாற்றம் குறித்துகளப் பணியில் அனுபவம்கொண்ட போலீஸாரின் கருத்துகள் கேட்கப்படவில்லை.

ஓரிரு உயரதிகாரிகள், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றங்களை செய்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி தகராறும் ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினைக்கு உயரதிகாரிகள் விரைவாக தீர்வுகாண வேண்டும்” என்றனர்.போக்குவரத்து மாற்றம் காரணமாக தாராப்பூர் டவர் எதிரே இடதுபுறமாக திரும்பி, டேம்ஸ் சாலைவழியாகச் செல்லக் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்.
 

தலைப்புச்செய்திகள்