Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்த மத்திய அரசு: மவுனம் காக்கும் மாநில அரசுகள்

மே 23, 2022 05:44

புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய குறைத்தாலும், பல மாநில அரசுகள் தங்களின் ‛வாட்' வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியும் மாநில அரசுகள் மவுனம் காக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா, ரஷ்யா - உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், மத்திய அரசு கடந்த நவ.,3ம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.10ம் குறைத்தது.

அதன்பின்னர், நேற்று முன்தினம் இரவும் மத்திய அரசு பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.8ம், டீசலுக்கான வரி ரூ.6ம் குறைத்தது. மத்திய அரசு கலால் வரிகளை குறைத்ததும் மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தினார். ஆனால், தமிழக அரசு வரியை குறைக்காது என மாநில நிதியமைச்சர் தியாகராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதேநேரத்தில், ராஜஸ்தான், கேரளா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மட்டும் பெட்ரோல், டீசல் மீதான வாட் எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியை குறைத்துள்ளது. மற்ற மாநிலங்கள் இன்னும் மவுனம் காத்து வருகின்றன. அரசுகள் மவுனம் காக்காமல், மக்களின் கோரிக்கையை காது கொடுத்து கேட்டு செயல்படுவதே மக்களுக்கான அரசாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றன. மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு மாநில அரசுகளும் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்குகின்றனர்.

தலைப்புச்செய்திகள்